பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

310

மாறுபட்டால், ஆற்றின் உற்பத்தியிடமான இந்த ஊற்றுத் தாழ்ந்த இடத்திற்கு மாறியிருக்கிறது. ஆற்றின் படுகை காய்ந்து, குகையாக மாறிப் போயிருக்கிறது. நூற்றுக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னாலே, சில மனிதர்கள் மலையின் மேற்புறத்திலேயுள்ள குகைகளையடைந்து, படிக்கட்டுகளும் நடைபாதைகளும் அமைந்திருக்கிறார்கள். மலையின் அடித்தளத்திலே, நடு மையத்திலே அவர்கள் ஒரு கோயில் ஏற்படுத்தி யிருக்கிறார்கள். அவர்கள் தொழுகை செய்த இடத்திற்குப் போவோம், வா” என்று உமாரை அழைத்துச் சென்றான்.

மலையின்மேல் உள்ள இந்தக் கழுகுக்கூடு என்ற கோட்டை, மற்ற எந்தக் கோட்டைகளைக் காட்டிலும் பெரிதாக இருக்க முடியாதென்றே எண்ணியிருந்தான். ஆனால், பாறைகளின் ஆழத்திலே, பலப்பல வழிகளையுடைய ஒரு பெருங்குகையாக இருப்பதைக் கண்டான். அந்த மலையின் உட்புறத்திலே இருக்கும் எந்த இரகசியத்தையும் வெளியில் செல்வோர் எத்தனை தலைமுறையானாலும் அறிய முடியாதபடி அமைந்திருந்தது, அந்தக் குகைக்கோட்டை. வெளியுலகம் அறியாமல் ஆயிரக்கணக்கான மனிதர்கள் அங்கே வாழ்ந்து வரமுடியும்.

அவர்கள் சென்ற வழியில் ஒரு கரியகாவற்காரன் நின்று கொண்டிருந்தான். இவர்கள் கடந்து சென்ற பொழுது, ஹாஸானைப் பார்த்துவிட்டு அவன் தரையில் விழுந்து வணங்கினான். அந்தக் குறுகிய வழியின் மூலையில் உள்ள ஒரு கதவை ஹாஸான் இழுத்துத் திறந்ததும், உமார், அந்தக்கல் மிருகம் இருக்கும் குகைக்கூடத்திலே மீண்டும் தான் வந்து சேர்ந்திருப்பதையறிந்தான்.

ஆனால், அந்தக்கூடம் இப்பொழுது சங்கீதம் நடனம் போன்ற எவ்வித ஒலியுமின்றி அமைதியாக இருந்தது. அங்கு அர்ப்பணம் செய்தவர்கள் யாரும் இல்லை. ஆனால், நடனக்காரர்கள் ஆடிக் கொண்டிருந்த இடத்திலே மட்டும், கற்பாறைகளின் வெடிப்பிலிருந்து வெளிவந்த நெருப்பு நாக்குகள் இன்னும் எரிந்து கொண்டே யிருந்தன. நெருப்பு நாக்குகள் ஓங்கி எரிகின்றபொழுது, கல்மிருகம் விளக்கமாகத் தெரிந்தது. அவை சற்று மறைந்து காணப்படும் போது அந்தக்கூடம் முழுவதும் இருள் சூழ்ந்தது. இரண்டு நாட்களுக்கு