பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

311

முன்னால் தான் அங்கு வந்திருந்தபோது கவனிக்காத இரண்டு புது விஷயங்களை உமார் அப்பொழுது கவனித்தான். அந்தக் கூடத்தின் காற்று கதகதப்பாக இருந்தது ஒன்று ஒருவிதமான எண்ணெய் நாற்றம் மற்றொன்று.

உள்ளே நுழைந்த ஹாஸான் என்றும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கும் அந்த நெருப்பைப் பார்த்தபடியே சற்றுநேரம் பேசாமல் இருந்தான்.

“இதன் இரகசியம் யாருக்குத் தெரியுமோ?” என்று ஆரம்பித்த ஹாஸான், “இதோ, இந்தப் பாறை வெடிப்புக்களுக்குக் கீழே எங்கோ ஒருவிதமான எண்ணெய் ஊற்று இருக்கவேண்டும். ஆனால், முதலில் நெருப்பு எப்படி இங்கு வந்தது என்பதும், அது எவ்வாறு இடைவிடாமல் எரிகிறது என்பதும்தான் புரியாத விஷயமாக இருக்கிறது. இதுமிகப் பழமையான காலத்திலிருந்து தெய்வமாக வழிபடப்பட்டு வருகிறது என்பது மட்டும் உறுதி. எகிப்தியர்கள் ராதேவனை வழிபடும் வழக்கம் தொடங்குவதற்கும் முன்னால், சாரதுஸ்திரியர்களுக்கும் முன்னால், சூரியதேவனை வழிபாடு நடத்தும் வழக்கம் தொடங்கப் பெறுவதற்கும் முன்னால் இந்த நெருப்பு வணக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஏனெனில், இது பழங்காலத்து மக்களுக்குப் பெரிய மாயமாக இருந்திருக்கவேண்டும். அது உண்மையில் மாயமான நிகழ்ச்சிதான்.”

“இந்த இறக்கை படைத்த எருதை அந்தப் பழங்காலத்து மக்கள் செய்திருக்க மாட்டார்கள், இல்லையா?” என்று உமார் கேட்டான்.

“இல்லை, இது பழைய பாரசீகத்தாரால் ஏற்படுத்தப் பெற்றது. பாரசீகத்தாரும் முற்காலத்தில் நெருப்பு வணக்கம் செய்திருக்கிறார்கள். பாரசீகர்கள், இந்த இடத்தைப் புனிதமான இடமென்று நினைத்து வந்ததற்குக் காரணம் என்னவென்றால், தங்கள் மூதாதையர்களின் கோயிலாக இது இருந்திருப்பதும், இடைவிடாது தொழுகை நடந்து வந்திருப்பதுமே ஆகும். புனிதமான நெருப்புக் கடவுளுக்குத் தங்கள் மரியாதையைக் காட்டுவதற்காக, அவர்கள் இந்த மிருகத்தைச் செய்து இங்கே நிறுத்தி இருக்கிறார்கள். இது போன்ற பழைய உருவங்களை,