பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

314

சுவர் வரந்தையை விட்டு குதித்தன.

ஒரு முகத்திலே, சொர்க்கத்தைக் காணவேண்டும் என்கிற ஆவல் உணர்ச்சியும், மற்றொரு முகத்திலே பயத்தின் குறிகளும் தோன்றியிருப்பதைக் கண்டான். எந்த உணர்ச்சிகள் இருப்பினும் அந்த இரண்டு உருவங்களும் குதித்த குதியிலே, சுவர் வரந்தையைத் தாண்டி அப்பால் மறைந்து போயின. மூன்றாவது உருவம் வரந்தை ஓரத்திலே நின்று தடுமாறிக் கொண்டிருந்தது. “உன்னையும்தான் சொர்க்கம் அழைக்கிறது” என்று அமைதியாக ஆனால் அவசரமாகக் கூறினான் ஹாஸான்.

வரந்தை யோரத்திலே தடுமாறி நின்று கொண்டிருந்த அந்த மூன்றாவது ஆளும், வெளிப்புறத்திலே சாய்ந்து கீழே விழுந்தான். உமார் சுவர் ஓரத்தைக் கெட்டியாகப் பிடித்தபடியே வெளிப்புறத்திலே கீழ்நோக்கி எட்டிப்பார்த்தான். முன்னால் குதித்த இருவருக்கும் பின்னால் மூன்றாவது ஆளும் கீழே விழுந்து கொண்டிருந்தான். ஆடைகள் காற்றில் பறக்க ஆடிக்கொண்டே செல்லும் மூன்று பந்துகள்போல், அந்த மலையுச்சியிலிருந்து கீழேயுள்ள செங்குத்தான, ஆழமான பள்ளத்தாக்கிலே நூற்றுக் கணக்கான அடிகளுக்குக் கீழே உள்ள மரக்கூட்டத்தின் இடையிலே அந்த உருவங்கள் விழுந்து கொண்டிருந்தன. அடிவாரத்திலே உள்ள பாறைகளிலே விழுந்து எலும்பு நொறுங்கி மண்டையுடைந்து, சதை கிழிந்து, குருதியொழுகிச் செத்துத் தொலைவதற்காகச் சென்றுகொண்டிருந்த அந்த உருவங்களைப் பார்த்த உமார் ஹாஸானைத் திரும்பிப் பார்த்தான்.

ஹாஸான், தன் கண்களிலே பிரகாசத்துடன், “பார்த்தாயா? அவர்கள் எனக்கு எவ்வளவு கீழ்ப்படிந்து நடக்கிறார்கள்? யாராவது மாலிக்ஷாவிற்கு இவ்வளவு உண்மையாகக் கீழ்ப்படிந்து நடந்ததுண்டா?” என்று உமாரை நோக்கிக் கேட்டான்.

அவன் அருகிலே வந்த உமார், “எந்தவிதமான பயனுமில்லாமல், மூன்று உயிர்கள் வீணாகச் சாகடிக்கப்பட்டதைதான் நான் கண்டேன்” என்றான்.

“இல்லை, உனக்கு என்னுடைய சக்தியைக் காட்டுவதற்கு ஆதாரமாக அவை சாகடிக்கப்பட்டன. இந்த மூன்று உயிர்கள்