பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

321


கோட்டைச் சுவரின் கீழ்ப்பகுதியிலிருந்து தப்பிக்க முடியாவிட்டால், அந்தச் சுவரின் ஊடாகவே சென்றால்தான் தப்பிக்கலாம். அதற்கு வழி கோட்டைச் சுவருக்கு ஊடே உள்ள வாசல் வழியாக வெளியேற வேண்டும் என்று உமார் முடிவு செய்தான்.

அந்தப் பெரிய நுழைவாசல் கதவு தினமும் இரவு நேரத்திலே அடைக்கப்பட்டது. ஒரு விளக்கு அதன் அருகில் எரிந்து கொண்டிருந்தது. அங்கு ஏழு பேர் அர்ப்பணம் செய்தவர்கள் காவல் காத்துக் கொண்டு இருந்தார்கள். ஒரே ஒரு தடவை, கோட்டைச்சவர் அருகிலேயிருந்த சிறியகதவு வழியாக ஒரு மனிதன் இரவிலே வெளியேறியதை உமார் பார்த்திருக்கிறான். அந்த மனிதன் நெட்டையான ஒரு பிரசாரகன். அவன் அங்கு நின்றபோது காவல்காரர்களிடமும் ஒரு அடையாளச் சீட்டுக் காண்பித்தான். அவர்கள் அந்தச்சிறு கதவை அவனுக்குத் திறந்துவிட்டார்கள்.


39. “தப்பி ஓடிய பாதையில்!"

இரவு நேரத்திலே, உமார் தன் அறையைவிட்டு வெளியேறிய போதெல்லாம், நடைபாதையிலே உள்ள காவல்காரர்கள் அவனைப் பின்தொடர்வதைப் பார்த்திருக்கிறான். ஆகவே இரவில் தப்பிப்பறப்பதென்பது இயலாத காரியம். சிறு கதவு இரவிலேதான் திறக்கப்படும். பகலில் பூட்டப்பெற்றிருக்கும். ஆகவே, பகலில் பெரிய நுழைவாசல் கதவின் வழியாகத்தான் வெளியேற வேண்டும் என்று உமார் முடிவு செய்து கொண்டான்.

அதன் பிறகு கோட்டையின் உச்சியில் இருந்த ஓரிடத்திலிருந்து பகல் முழுவதும் தலைவாசலைக் கவனித்துக் கொண்டேயிருந்தான். அவனுக்கு ஊக்கம் கொடுக்கக்கூடிய நிகழ்ச்சிகள் எதுவுமே அகப்படவில்லை. சாதாரணமாகக் கிராமத்து மக்கள் அல்லது வியாபாரிகள், அந்த வாசலிலே கொண்டுவந்து பொருள்களை வைத்து விடுவதும், கோட்டைக்குள்ளே இருப்பவர்கள் அவற்றையுள்ளே தூக்கிவருவதும் வழக்கமாக இருந்தது.