பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

323

அவ்வளவு திறமையாகத் தன் வேஷத்தை மாற்றிக் கொண்டிருந்தான் ஹாஸான். ஆனால், அவனுடைய நடை, உமாருக்கு அவனைக் காட்டிக் கொடுத்துவிட்டது.

ஹாஸான், தனக்குப் புறாக்கள் மூலம் செய்திவரும் விஷயம் கோட்டையில் இருப்பவர்களுக்கே தெரியாதென்று ஏற்கெனவே கூறியது உமாருக்கு நினைவுவந்தது.

அப்படியானால், பக்கத்திலேயுள்ள கிராமத்துக்கு செய்தியனுப்பவும் சேகரிக்கவும் அவன் தினமும் வெளியில் சென்று வருகிறான் என்பதை எண்ணி முடிவுகட்ட முடிந்தது.

“தலைவாசல் வழியாக, ஒரு பிரசாரகனைப்போல ஹாஸானுடைய நடை நடந்து வெளியேறவேண்டும்” என்று உமார் தனக்குள் தீர்மானித்தான்.

அடுத்து, பிரசாரகனுடைய உடையை எப்படி சம்பாதிப்பது? ரக்கின் உட்டின் என்ற அந்த அறிஞன் பலமுறை சொர்க்கத்தைப் பற்றியும் சொர்க்கத்து மதுவைப் பற்றியும் அவனிடம் கேட்டிருக்கிறான். அத்தோடு முதல்நாள் கத்தி நடனத்தின்போது, நடுங்கும் கைகளுடன் ஆவலாக மதுவை அவன் ஒரே வாயில் குடித்ததையும் உமார் பார்த்திருந்தான் எனவே அவனைத் தன் அறைக்கு அழைத்து வந்தான்.

அவனைப் படுக்கையிலே உட்கார வைத்துவிட்டு ஜாடியில் இருந்த மதுவைக் கிண்ணத்தில் ஊற்றித் தன் உதட்டருகே கொண்டுபோய் வைத்துக்கொண்டு, “சொர்க்கத்தின் மது!” என்று கூறினான்.

ஹாஸான், விஞ்ஞான ஆராய்ச்சி செய்யும் அறிஞர்களுக்கு மது கொடுத்து மயக்குவதில்லை. சொர்க்கபோகம் அவர்களுக்குத் தடுக்கப்பட்டது என்று கூறியிருக்கிறான். ரக்கின் உட்டின் என்ற இந்த அறிஞனோ, ஒரு முறையாவது சொர்க்க போகத்தின் இன்பத்தை அனுபவித்துப் பார்க்கத் துடித்தான்.

“உண்மையாகவா? அதே மதுதானா?” என்று ஆவல் பொங்கக் கேட்டான் ரக்கின்.

“சந்தேகமாயிருந்தால் குடித்துப்பார்” என்று உமார் மதுக்கிண்ணத்தைக் கொடுத்தான். கதவு அடைத்திருக்கிறதா