பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

325


என்னை அனுப்பினார். கிராமத்திற்குப் போய்ப் புறாக்களின் மூலம் செய்தி அனுப்பவேண்டும்” என்று கூறியவன் தன் இடுப்பிலே யிருந்த, அந்தப் பழைய செய்திக் குழாயை வெளியில் எடுத்தான். காவல் இருப்பவர்களுக்கு இதெல்லாம் புரியாத விஷயம். அவர்களுடைய தலைவன் இந்த மாதிரியான விஷயங்களை அவர்களிடம் தெரிவிப்பதேயில்லை, குழம்பிக் கொண்டிருந்தார்கள். காவல் தலைவன், ஆயுதங்களிலே பயிற்சி பெற்றவனே தவிர, அறிவை உபயோகிக்கத் தெரிந்தவன் அல்ல. எனவே, உமார் அவனிடம் அந்தக் குழாயைக் கொடுத்து, “இதோ இதை நீ வைத்துக்கொள். நான் புறாக்கள் இருக்கும் வீட்டிற்குச் சென்று தபால் குதிரைகளைக் கொண்டு வருகிறேன். செய்திக் குழாயைத் தொலைத்துவிடாதே. தலைவர் அறிந்தால். அவருடைய கோபம் உன் தலைமேல்விழும்” என்று கூறிவிட்டு வேகமாக நடந்தான்.

அவன் அந்தக் குழாயைக் கெட்டியாகப்பிடித்துக் கொண்டே, “சரி, சீக்கிரம் திரும்பி வா!” என்று கூறினான்.

அக்ரோனோஸ் போன்ற முகம் தெரிந்த பேர்வழிகள் எதிரில் வராமல் அருள்செய்ய வேண்டுமென்று அல்லாவை வேண்டிக் கொண்டு வைக்கோல் போர்களுக்கும், குப்பை மேடுகளுக்கும் நடுவே புகுந்து அந்தக் கிராமத்திலே புறாக்கள் இருக்கும் வீட்டைத் தேடினான். ஒரு வீட்டின் அருகிலே, வானிலே புறாக்கள் பறந்து வட்டமிட்டுக் கொண்டிருந்தன, புறாக்கூடுகளும் இருந்தன. அங்கே முன்னால் இருந்த மனிதனிடம் “ஒரு கூண்டிலே இரண்டு புறாக்கள் போட்டுக் கொடு, சீக்கிரம்” என்று உமார் கேட்டான்.

“ஐயா, கழுகுக் கூட்டுத் தலைவரின் புறாக்களையா கேட்கிறீர்கள்?”

“வேறு என்ன? மலைத்தலைவர் ஷேக் அல் ஜெபல் அவர்களே கட்ளை யிட்டார்” என்றான் உமார் தடுமாற்றமில்லாமல். ஹாஸான் புறாக்களை வாங்கிவரச் சொல்லும் பழக்கம் இல்லையோ, அல்லது அவன் பெயர் அவனைப் பயமுறுத்தியதோ தெரியவில்லை. அந்த மனிதன் குழம்பிப் போய் நின்றான்.