பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

332

வேறு! ஆனால், நான் உன்னுடைய இடத்தில் கண்ட விஷயங்களைப் பொறுத்த வரையில் ஒன்று கூற விரும்புகிறேன். எனக்கும் என்னைச் சேர்ந்தவர்களுக்கும் உன்னால் எந்தவொரு தீங்கும் ஏற்படாதவரையில் அவை இரகசியமாகவேயிருக்கும்!”

இந்தக் கடிதத்தின் கீழே கையெழுத்தோ அடையாளமோ எதுவும் போடாமல், சுருட்டி ஒரு சிறு குழாய்க்குள்ளே போட்டான். புறாக்களில் ஒன்றைக் கூண்டிலிருந்து எடுத்து, அதன் ஒரு காலிலே அந்தக் குழாயைக் கட்டினான். அந்தப் புறாவைக் காற்றிலே தூக்கி எறிந்தான். அது தன் இறக்கைகளை விரித்துப் படபடவென்று அடித்துக் கொண்டு அந்த நகரத்தை ஒருமுறை சுற்றிவந்தது. பிறகு தூரத்து மலையை நோக்கி அம்பு போலப் பாய்ந்து பறந்தது.

அயீஷா வாயைப் பிளந்து கொண்டு அதிசயத்துடன் ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘மாயக்காரர்கள் இருக்கும் இடத்திற்கு அது போகிறது’ என்று உமார் கூறினான்.

அயீஷாவுக்கு ஆச்சரியத்தால் தலை சுற்றியது.


41. குத்துக் கத்தியும் சுட்ட ரொட்டியும்

சுல்தான் மாலிக்ஷா அவர்கள் தன் சபையைவிட்டு உமார் விடுபட்டுப் போகும்படி விடுவதாக இல்லை. தன்னுடைய சாம்ராஜ்யத்தின் வளர்ச்சியே, உமார் கூறிய சோதிடக்குறிகளின் பயனாக வந்ததென்று முழு மனதுடன் எண்ணினார். தன்னுடைய வெற்றிகளுக்கும் அதுவே காரணமென்றும் எண்ணினார். உமாரின்மேல் அவருக்கு அளவு கடந்த நம்பிக்கையிருந்தது.

ஒருநாள் பேசிக் கொண்டிருக்கும் போது உமாரைப்பற்றி அவர் வெகுவாகப் புகழ்ந்து கொண்டிருந்தார். அப்பொழுது பேச்சோடு பேச்சாக உமார், ‘நிசாம் அவர்கள் எந்தவிதத்திலும் தங்களுக்குத் துரோகம் செய்யவில்லை’ என்றான்.

‘நிசாம், அளவுக்குமீறிய வகையில் என்னுடைய அதிகாரங்களைக் கையாண்டார்’ என்று பதில் கூறிவிட்டு தன்னுடைய திருக்குரான் புத்தகத்திலிருந்த ஒரு சிறு