பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

351


‘ஆம்! அல்லாவின் ஆற்றல்தான் இந்த உலகத்தைச் சுழலவைக்கிறது. அவருடைய சக்திதான் நூற்றுக்கணக்கான கோளங்களையும் வான்வெளியிலே படைத்தது. அதே சக்திதான் நம்முடைய சிறிய உயிர்களையும் இயக்குவிக்கிறது. இதைநாம் அறியாமல் இருக்கிறோம்’ என்று உமார் கூறினான்.

‘எல்லா அறிவையும் அல்லாவிடமிருந்தே பெறுகிறோம். அல்லா நமக்குக் கதிரவன் போன்றவர்! மற்ற எல்லா அறிவுகளும், அவரிடமிருந்து பெற்ற வெளிச்சத்திற்குச் சமம்! உமார், உன்னுடைய அறிவு, அல்லாவின் ஏற்பாட்டைக் குற்றம் காணும் அளவு பெரியதல்ல’ என்று காசாலி விளக்கம் கூறினார்.

‘இந்த வானவெளியில் உள்ள எந்தச்சிறு துளியும்கூட அவனுடைய ஆற்றலுக்குட்பட்டதுதான். ஞாயிறும் அவ்வாறே. அந்த ஞாயிறு எப்படியிருக்கிறது என்பதைக்கூட நாம் தெரிந்து கொள்ளாவிட்டால், அதிலிருந்து நாம் எந்தவிதமான அறிவைப் பெறமுடியும்?’

உடனே காசாலி, தன் மாணவன் ஒருவனையனுப்பிக் கிணற்றில் நீர் மொண்டுவரச் சொன்னான். அதைத்தன் கைகளிலும் கால்களிலும் ஊற்றிக் கழுவச் சொன்னான். பிறகு, உமாரைப் பார்த்து, உமார் கயாம்! பேசுவதை ஆராய்ந்து பேசு. சற்றுமுன் நீ பேசியவை கடவுள் நிந்தனைகளாகும்.

ஆண்டவன் இந்த மண்ணுலகிற்கும் விண்ணுலகிற்கும் ஒளியானவர். அவருடைய அருளுக்குரியவர்களுக்கே அவர் வழிகாட்டுவார், எச்சரிக்கை’ என்று கூறிவிட்டுத் தன் மாணவர் கூட்டத்துடன் வெளியேறுவதற்காக எழுந்திருந்தான்.

‘ஏற்கெனவே, ஒருவன் பற்களுக்கிடையிலேயே நாவை வைத்துக் கொள்ள எச்சரித்திருக்கிறான். இப்பொழுது தாங்களும் நாவையடக்கும்படி கூறிவிட்டீர்கள். ஒரு மனிதன் என்றும் வாழ்ந்துகொண்டிருக்க முடியாது. என் உயிர்க்கயிறு எந்த நேரத்தில் அறுந்துவிழும் என்றும் சொல்ல முடியாது.

எனவே, நான் நாளைக்கே கல்லூரிப் பேரவைக்குச் சென்று, என்னுடைய ஆராய்ச்சியின் பலனை எல்லோருக்கும் கூறிவிடப் போகிறேன்’ என்றான் உமார்.