பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

360


ஆனால், உமாருக்கு நிசாப்பூரை விட்டுப்போக மனமில்லை. அவன் தொடங்கி வைத்திருந்த ஆராய்ச்சிகளும், செய்து முடிக்கப்பட வேண்டிய வேலைகளும் எராளமாக இருந்தன. எல்லாம் விண்மீன் வீட்டிலே அறைகுறையாகக் கிடந்தன.

இருட்டு வரும் நேரம், இஷாக் ஒடி வந்தான். ‘தலைவரே! ஏராளமான மக்கள் விண்மீன் வீட்டைநோக்கித் திரண்டு செல்கிறார்கள். அவர்களிலே, சிப்பாய்களும், முல்லாக்களும், இன்னும் ஒன்றுமில்லாதவர்களும் பலப்பலர்.

அவர்கள் உம்பெயரைக் கூறிப்பழித்துக் கூவிக்கொண்டே போகிறார்கள். நகரத்துக் கோட்டைக் கதவுகளை உடைப்பதற்கு முன்னால், முடிந்தவரை பொருள்களை எடுத்துக் கொண்டு காசர்குச்சிக்கு ஓடிவிடுவோம், புறப்படுங்கள்’ என்றான்.

‘ஒரு குதிரைக்குச் சேணம் பூட்டி, ஆயத்தமாக்கு’ என்றான் உமார்.

குதிரையின் மேல்ஏறி விண்மீன் வீட்டை நோக்கிப் பறந்தான். மரங்களமைந்த பகுதியைவிட்டு வெளியே வந்து நெருங்கும்போது, எதிரிலே ஒரே தீப்பிழம்பாகக் காட்சியளித்தது. அவனுடைய புத்தகங்கள், குறிப்பேடுகள், ஆராய்ச்சிக் கருவிகள் எல்லாம் நெருப்பிலே எரிபட்டுக் கொண்டிருந்தன.

அங்குமிங்குமாக, அங்கேயிருந்த பொருள்களைக் கொள்ளையிட்டுச் செல்லும் கூட்டம் வேறு.

உமார் பார்த்துக் கொண்டே இருந்தான். ஏபிரேட்ஸ் ஆற்றங்கரையிலே யாஸ்மி இறந்த பிறகு, கூடாரம் எரிந்து கொண்டிருந்த காட்சி நினைவுக்கு வந்தது.

யாஸ்மி, இந்த வீட்டுக்கு விண்மீன் வீடு என்று பெயர் வைத்தாள். இங்கே தன்னோடு இருக்க வேண்டுமென்று எவ்வளவோ ஆசைப்பட்டாள். விதி இருக்க விட்டதா? இப்பொழுது அவளும் இல்லை. விண்மீன் வீடும் இல்லை.

நெருப்பு அடங்கியது, மக்களும் கலைந்து போய்விட்டார்கள். உமார் உள்ளே சென்று பார்த்தான், ஒன்றுமில்லை. இனி அவன் அங்கிருந்து என்ன பயன்? திரும்பிச் செல்வதற்காகக் குதிரையைத் தேடினான். யாரோ அதையும் திருடிச்சென்று விட்டார்கள். அவன் நடந்து கோட்டைக் கதவின் அருகில் வந்தான். கதவு மூடப்பட்டிருந்தது.