பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

தொடங்கின. ஆங்காங்கே சிதறிக்கிடந்த பொருள்களை அரபியர் சிலர் கொள்ளையிட்டுக் கொண்டிருந்தார்கள்.

இப்பொழுது நிச்சயமாக சுல்தான் நம்மையும் போரில் குதிக்கச் சொல்லுவார் என்று ரஹீம் எதிர்பார்த்தான். ஆனால், பொழுது சாய்ந்து இருண்டுவரும் நேரத்தில் ஒரு தோட்டத்தில் வந்து இறங்கிய துருக்கிக் குதிரைப் படைகளின் அருகே, வந்து சேர்ந்தார்கள். துருக்கிப் படைகள் எங்கோ கிடைத்த காய்ந்த சுப்பிகளைக் கொண்டுவந்து எரித்து நெருப்பு காய்ந்து கொண்டிருந்தார்கள்.

அங்கேயே, இரவு தங்கும்படி, ஆணையிடப்பட்ட கொரசானியப் படைக்கு உணவும் கிடைக்கவில்லை; குளிர்காய நெருப்பும் கிடைக்கவில்லை.

இந்த சங்கடமான சூழ்நிலையில் அன்றைய இரவைக் கழித்துக் கொண்டிருந்த அவர்கள், காலை வெளிச்சம் தோன்றிய சமயத்தில் தூரத்தில் பேரிகை முழக்கம் கேட்டு எழுந்தார்கள்.

அந்தப் பேரிகையொலி கிறிஸ்தவர்களின் முகாமிலிருந்து கிளம்பியது. இருட்டில் நடந்த ஏதோ ஒரு சூழ்ச்சியினால், கிறிஸ்தவப் பேரரசருடைய பின்னணிப்படை, வெகு தூரத்திற்குப் பின்னோக்கிச் சென்றுவிட்டது. காலாட்படைகளோ, மலைப்புறத்திலே துண்டிக்கப்பட்டு தனியாக சுல்தானுடைய படைகளால் சூழப்பட்டுச் சரண் அடைந்துவிட்டது. இந்த இக்கட்டான, சூழ்நிலையில் கிறிஸ்தவச் சக்கரவர்த்திக்கு, தன்னுடைய படையைச் சிறிது பின்வாங்கிக் கொள்ளும்படி நேர்ந்துவிட்டது. இப்பொழுது, பொழுது விடிந்ததும் புதிய படையெடுப்புக்குக் கிளம்பும்படி தன்னுடைய குதிரைப் படையை அழைக்கும் அடையாளமாகத்தான் பேரிகையொலி எழுப்பப்பட்டது. உமாரும், ரஹீமும், குளிர்தாங்காமல், ஒடுங்கி உறங்கிக் கிடந்தார்கள். அவர்களுக்கு இந்த விஷயங்களே அடியோடு தெரியாது. அவர்களுடன் கூட வந்தவர்கள் அவர்களுடைய குதிரைகளுக்கும், சேணம் பூட்டி ஆயத்தம் செய்து, அவர்களையும் எழுப்பிக் கிளம்பச் செய்தார்கள். என்ன நடக்கிறது என்று புரியாமலே அவர்கள் இருவரும், பாய்ந்தோடும் குதிரைகளின் மேலே, பக்கமெல்லாம் படைவீரர்கள் சூழப் போய்க் கொண்டிருந்தார்கள்.