பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45


ஆனால் உமார் போர்க்களத்திலிருந்து ஒருசிறு கத்திகூட எடுத்துக் கொண்டுபோக விரும்பவில்லை. தன் உயிர் நண்பனான ரஹீமைப் பறிகொடுத்த துயரத்தை நினைவூட்டக்கூடிய எந்தப் பொருளையுமே அவன் எடுத்துச் செல்ல விரும்பவில்லை.

ரஹீமின் பணியாளான யார்மார்க் தன் எஜமானனின் கருப்புக் குதிரைக்கு சேனங்கட்டி, இறந்துபோன தன் தலைவனுடைய ஆயுதங்களையும் பொருள்களையும் முட்டையாகச் சேணத்தின் பின்புறத்திலே கட்டினான். உமார் அந்தக் கருப்புக் குதிரையைப் பார்த்தான். வெறும் சேணத்துடன், அதைத்தன் பக்கத்தில் நடத்திக் கொண்டு வழி முழுவதும் செல்வது இயலாத காரியம் என்று தோன்றியது. ஆனால் அவற்றை ரஹீமுடைய தகப்பனாரிடத்தில் ஒப்படைக்க வேண்டிய கடமையும் அவனுக்கு இருந்தது.

“இந்த ரோமானியப் பெண்ணை அந்தக் குதிரையைச் செலுத்திக் கொண்டுவரச் செய்யலாமே! அவளைச் சுமந்து செல்ல வேறு மிருகங்களும் இல்லை” என்று யார்மார்க் சொன்னான்.

அடிமையாகப் பிடிபட்ட அந்தப் பெண் ரஹீமின் சொத்தாவாள். அவளையும் கூட அழைத்துச் செல்ல வேண்டும். பட்டுப் போன்ற கூந்தலும், அழகும் இளமையும் பொருந்திய அவளை, நிசாப்பூர் அடிமைச் சந்தையில் நல்ல விலைக்கு விற்கலாம். ரோமானியர்களின் தேசத்தைச் சேர்ந்த அவளோடு கிரேக்க மொழியில்தான் பேசமுடியும். பள்ளிக் கூடத்தில் உமார் படிக்கும்போது, பல கிரீக் வார்த்தைகளைத் தெரிந்து கொண்டிருந்தான். அந்த அரைகுறைக் கிரேக்கச் சொற்களை வைத்துக் கொண்டு அந்தப் பெண்ணோடு பேசி, அவளைப் பற்றிய சில விவரங்களைத் தெரிந்து கொண்டான்.

அவளுடைய பெயர் அழகி ஸோயி என்பது. கான்ஸ்டான்டிநோபிள் நகரில் அவள் எப்போதும் அடிமைப் பெண்ணாகவே இருந்து வந்ததால் அவளுக்கு வேறு உறவு எதுவும் கிடையாது. ரோமானியச் சக்கரவர்த்தியைப் போலவே, இஸ்லாமியர்களை எளிதாக அடித்து விரட்டி விடலாம் என்று எண்ணிக் கொண்டிருந்த கிறிஸ்துவ இராணுவ அதிகாரி ஒருவர் அவளைத் தன் அடிமைப் பெண்ணாகப் போர்க்களத்திற்குக்