பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

மறைப்பதற்காகவும், கரிய அடிமைப் பையன் ஒருவன், குதிரையை அடித்து நடத்துவதற்காகவும் அவர் உடன் கொண்டு செல்வது வழக்கம். அவருடைய வீடு நிஜாப்பூருக்குத் தெற்கே, விளைநிலங்களுக்கெல்லாம் அப்பால், பாலைவனத்தின் உப்புப் படுகைகளின் அருகிலே தனியாக இருந்தது. இது தொந்தரவு எதுவுமில்லாமல் நிம்மதியாகக் கணித ஆராய்ச்சியும் கல்வி போதனையும் செய்வதற்கு வசதியாக இருந்தது.

சுல்தான் அவர்களின் அமைச்சர், பல ஆண்டுகளுக்கு முன், பேராசிரியர் அலியை, கணிதநூல் ஒன்று, புது முறையிலே ஆக்கும்படி பணித்தார். அதற்கிணங்க அடையாள எழுத்துக்களின் மூலமாகவே எண்களின் நுட்பத்தன்மையைக் கணிக்கும் (அல்ஜீப்ரா) நூலொன்றை அலி எழுதி முடித்திருந்தார். அவருடைய மாணவர்களின் வேலை என்னவென்றால், அவர் கூறும் விஷயங்களைக் குறிப்பெடுப்பதும், அவர் கட்டளையிடும்போது, கணக்குகளைப் போட்டுக் காண்பிப்பதும், பழைய நூல்களிலிருந்து, அவருடைய ஆராய்ச்சிக்குத் தேவையான விஷயங்களைத் திரட்டிக் கொடுப்பதுமாகும். அதற்குப் பதிலாக, அந்தப் பேராசிரியர் அலி பிற்பகலில் மூன்று மணிநேரம் கணித விஞ்ஞானக்கலை நுட்பம் பற்றி விரிவுரை நிகழ்த்துவார். தம் செலவில் சாப்பாடும்போட்டு அவர்களை ஆதரித்தும் வந்தார்.

அவருடைய மாளிகையில் எட்டு மாணவர்கள் தங்கியிருந்தார்கள். கணித விஞ்ஞானக்கலையை, அவர்கள் ஒவ்வொருவரும் கசடறக் கற்றுத் தெளியவேண்டுமென்று அவர் அரும்பாடுபட்டு வந்தார். அவருடைய மரணத்திற்குப்பிறகு அல்லாவை வணங்கும் உலகப் பகுதியிலே கணித விஞ்ஞானம் அழிந்து போய்விடக் கூடாதென்பதற்காகவும், தம்முடைய ஆராய்ச்சி நூல்கள் பிற்கால உலகிற்குப் பயன்பட வேண்டுமென்பதற்காகவும், அவர் ஆர்வத்துடன் போதித்து வந்தார். அந்த எட்டுப்பேரிலும் உமார் மீதுதான் அவருக்கு நம்பிக்கையில்லை. பத்து மாதங்களுக்கு முன்வந்து அவரிடம் அண்டிய உமார் எதிர்காலத்தில் எப்படியிருக்கப் போகிறான் என்பது ஆசிரியருக்குப் புரியவேயில்லை. சிக்கலான கணித பிரச்சினைகளை எளிதாகக் கண்டு பிடிக்கும் சக்தியும் ஆபத்தைத் தரக்கூடிய கற்பனைத் திறமையும்