பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53

இருக்கிறதா?” என்று ஐயம் கேட்பவன்போல் கேட்டான். பக்கத்திலேயிருந்த மாணவன் வேடிக்கையாக “அடுப்பின் மூலம் அடையலாமே!” என்றான்.

பேராசிரியர் அலி பேசத் தொடங்கினார்! “எல்லாம்வல்ல அல்லா அவர்கள் தங்கத்தை மண்ணின் கீழிருந்துதான் பெற வேண்டுமென்று விதித்திருக்கிறார்கள். உண்மையான அறிவுள்ளவர்கள், இது போன்ற வீணான ஆராய்ச்சிகளில் இறங்கக்கூடாது” - இதைச் சொல்வதற்கு முன் பேராசிரியர் தம் மனத்தைத் திடப்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. சுல்தான் போன்றவர்கள், தங்கம் செய்யும் வித்தை தெரியும் என்று சொல்லிக்கொண்டு வந்தவர்களை நம்பிப் பலமுறை ஏமாந்திருக்கிறார்கள் என்று அவருக்குத் தெரியும். ஏமாந்ததன் மூலமாக, யாராலும் தங்கம் செய்யமுடியாது என்பதை அவர்கள் தெரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதை மனத்தில் இருத்திக் கொண்டுதான் அவர், தம் கருத்தைத் தைரியமாகச் சொன்னார். இருந்தாலும் உளவாளி என்று கருதப்படுகிற உமார் தம்மைக் கவனிக்கிறானா, என்ன நினைக்கிறான் என்று அவன் முகத்தை லேசாகப் பார்த்துக் கொண்டார். உமாரோ ஒரு தாளில் இறகு பேனாவில் ஏதோ வரைந்து கொண்டிருந்தான்.

பேராசிரியர் விரிவுரையாற்றும் போதும் உமார் அடிக்கடி இந்த மாதிரிப் பேனாவினால் ஏதோ எழுதிக் கொண்டிருப்பதை அவர் கவனித்திருக்கிறார். ஆரம்பத்தில் அவன் தன்னுடைய உரைகளைக் குறிப்பெடுக்கிறான் என்று அசட்டையாக இருந்தார். அவன் அமைச்சருடைய ஒற்றனாக இருப்பானோ என்ற எண்ணம் ஏற்பட்ட நாளிலிருந்து இந்தக் குறிப்புகளை அவன் அமைச்சரிடம் கொண்டு போய்க் காண்பிப்பதற்கு அத்தாட்சியாகப் பயன்படுத்தக்கூடுமே என்ற எண்ணம் ஏற்பட்டது. மேலும் இப்படி அவன் எழுதும் தாள்களை அவனுடைய படுக்கைக்குப் பக்கத்திலேயுள்ள மரப்பெட்டியில் பூட்டி வைத்துக் கொள்ளும் வழக்கமும் வைத்திருந்தான். ஆகவே, ஆசிரியரின் சந்தேகம் உறுதிப்பட்டது.

அன்று பேராசிரியர் திடீரென்று எழுந்து உமாரின் அருகிலே வந்து அவன் எழுதிக் கொண்டிருந்த தாளை கவனித்தார். ஒரு கனஅளவைக் காட்டும் படம் வரைந்து, பல கோடுகளால் பிரிக்கப்பட்டிருந்ததையும் அவற்றின் இடையே எண்கள் எழுதப்பட்டிருப்பதையும் அந்தத் தாளிலே கண்டார்.