பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55

திருடிப்பார்த்து விடையைத் தெரிந்து கொண்டு கணக்கைச் செய்திருக்க வேண்டும் அல்லது அவன் இந்தக் கற்பனைக் கோடுகளின் உதவியால் தானாகவே செய்திருக்க வேண்டும்.

“இந்த முழுச்சதுரங்களின் அளவுகளைக் கொண்டு கனஅளவு மூலங்களைக்காட்டி வரைந்திருக்கிறாய், ஆனால் விடையை எந்த வழியாகக் கண்டு பிடித்தாய்? என்று அலி கேட்டார்.

உமார் குனிந்து வரைவுப் படத்தில் கைவைத்துக் காட்டியபடி “இந்தப் பகுதியைக் கழித்து இதையும் இதையும் கூட்டிப் பாருங்கள். விடைகிடைத்து விடுகிறது!” என்று காண்பித்தான்.

“என்னைக் குருடனென்றா நினைத்துக் கொண்டாய்? இது நான் உனக்குச் சொல்லிக் கொடுத்த அடையாளமுறைக் கணிதம் (அல்ஜிப்ரா) அல்லவே. மதநம்பிக்கை அற்ற கிரேக்கர்கள் கையாளுகின்ற இடைவெளிக் (ஜியோமிதி) கணிதம் அல்லவா இது.”

“இருக்கலாம், ஆனாலும் விடை கிடைத்து விட்டதல்லவா? எனக்கு அடையாள முறைக் கணிதத்தின் மூலம் செய்வது எளிமையாகத் தோன்றவில்லை.”

“இருந்தாலும் நான் கொடுத்தது அடையாள முறைக் கணிதம்தானே!”

“ஆம்! இப்பொழுது வழி கண்டுபிடித்து விட்டபடியால் அந்த முறையில் மாற்றிச் செய்வதும் கஷ்டமல்ல, எளிது தான்!” என்று சொல்லிக் கொண்டே உமார் அந்தக் கனஅளவு பார்த்துக் கொண்டே அடையாளக் கணித முறையின்படி அந்தக் கணக்கைச் செய்து காண்பித்தான். பேராசிரியர் அலி, உமாரின் திறமையைத் தெரிந்து கொண்டதுடன், அந்தக் கணித முறையையும் தம் நூலிலே சேர்த்துக் கொண்டார்.

இந்தக் கணிதத்தைச் செய்வதற்கு காரெஸ்மி என்ற கணிதப் பேராசிரியர் கூட முடியாதென்று சொல்லி முயற்சிக்காமலே போய்விட்டார். பாக்தாத் கல்லூரியில் இருந்த பேராசிரியர் உஸ்தாத், இம்மாதிரிக் கணக்குகளைச் செய்யப் பல்லைக் கடித்துக் கொண்டு முயற்சி செய்தும் பலன் ஏற்படவில்லை.