பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

“இது மாதிரியே வேறு கணக்குகளையும் செய்ய முயற்சிக்கிறாயா?” என்று பேராசிரியர் அலி வியப்போடு கேட்டார்.

“எத்தனையோ தடவை செய்திருக்கிறேன்” என்றான் உமார்.

“விடைகள் கிடைத்தனவா?”

“கிடைத்தன, ஆனால் ஒவ்வொரு முறை கிடைக்காமலும் போயிருக்கின்றன!”

“நீ செய்திருக்கும் மற்ற கணிதங்களையும் நான் பார்வையிடலாமா” என்று குழைந்து கொண்டே கேட்டார் அலி.

உமார் சற்று நிதானித்து ‘ஐயா நான் உங்கள் உப்பைத் தின்று வருகிறேன். உங்கள் காலடியில் இருந்து எத்தனையோ அறிய முடியாத விவரங்களை அறிந்திருக்கிறேன். நீங்கள் செய்யச் சொன்ன வேலைகளை நான் செய்து வந்திருக்கிறேன். ஆனால் இந்தக் கணித முறைகளெல்லாம், நான் சொந்தமாகக் கண்டு பிடித்தவை. அவற்றை உங்களுக்குக் காண்பிக்க இயலாதவனாக இருக்கிறேன். மன்னிக்க வேண்டும்” என்றான்.

பேராசிரியர் அலியின் கண்களிலே கடுகடுப்பு மிதந்தது. “அவற்றை வைத்துக் கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய்?”

“இன்னும் நான் அதைப்பற்றி ஒன்றும் முடிவு செய்யவில்லை” என்று கொஞ்சங்கூட அஞ்சாமல் உமார் பதில் கூறினான்.

“நீ செய்த கணிதங்களை யெல்லாம் பெட்டிக்குள்ளே பூட்டி வைத்திருக்கிறாய் அல்லவா?” என்று கேட்டார் அலி.

“ஆம்” என்றான் உமார்.

அவனை அனுப்பிவிட்டுப் பேராசிரியர் அலி, கன அளவுகளைப்பற்றிய கணக்குகளிலேயே தம் நினைவுகளை செலுத்திக் கொண்டு உட்கார்ந்திருந்தார். அன்று பிற்பகல் வகுப்பு நடத்த வேண்டியதையும் மறந்து விட்டார். உமார் செய்தது போலவே, மற்றொரு கணக்கைச் செய்து பார்த்தார். வெற்றி கிடைக்கவில்லை. அடையாள முறை மூலம் செய்ய வேண்டிய கணிதத்தை இடைவெளிக்கணித முறையில் செய்யலாம் என்பதை அவரால் நம்பக்கூட முடியவில்லை.