பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

ஜபாரக்கிடமிருந்து அவனுடைய உயிருக்கு உயிராய் இருந்தவர் போய் விட்டார். ஆய்லல்லா அல்லல்லா! சுல்தான் ஆல்ப் அர்சலான் கொலை செய்யப்பட்டு விட்டார்!” என்று மிக உருக்கமாகக் கதறினான்.

நீரில் ஆடி அலையும் நிலவின் சிதறிய ஒளியைக் கவனித்துக் கொண்டிருந்த உமார் அவன் சொன்னதை மனதுக்குள் வாங்காமலே, “எனக்குத் தெரியாதே!” என்றுரைத்தான்.

“நிசாப்பூர் முழுவதும் தெரியும் இன்றுதானே சாமர்க்கண்டிலிருந்து அவருடைய உடலைத் தூக்கிக் கொண்டு திரும்பி வந்தோம். அவருடைய விதி அவ்வளவுதான்! அண்ணே! அவருடைய ஆட்சியில் அவர் பலமும் உறுதியும் வாய்ந்தவராகத்தான் இருந்தார். அவரைச் சுற்றி ஒரு பாதுகாப்புப் படையே இருந்தது. இருந்தாலும் விதியின் செயலிலிருந்து விடுபட முடியவில்லை. சாமர்க்கண்டில் ஒரு பிடிபட்ட நாயை அவர் முன்னாலே கொண்டு வந்து நிறுத்தினார்கள். அவர் எதிரிலே அந்தக் கைதியைக் கொண்டு வரும்போது, வாள் பிடித்த இரண்டு வீரர்கள் இவனைப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அந்த நாய் நம் பேரரசரைப் பார்த்து இகழ்ந்து பேசியது. அதனால் சுல்தான் உள்ளத்திலே கோபம் கொழுந்து விட்டெரிந்தது. தன் கையிலே வில்லையும் அம்பையும் எடுத்து அந்த நாயின் நெஞ்சுக்கு நேரே குறி வைத்தார். அந்த நாயைப் பிடித்துக் கொண்டிருந்த வாள் வீரர்களை விலகி இருக்கச் சொல்லி விட்டு, நாணை இழுத்து விட்டார். ஒரே அம்பிலே கொல்லப்பட்டிருக்க வேண்டிய அந்தக் கைதியின் மேல் அந்த அம்பு படவில்லை. என்றும் குறி தவறாத இயல்புடைய எம் தலைவர் குறி அன்று எப்படியோ தவறி விட்டது. உடனே அந்த நாய் தன் இடுப்பிலே மறைத்து வைத்திருந்த இரு கத்திகளையும் உருவிக் கொண்டு, சுல்தான் அவர்கள் நெஞ்சிலே திடீரென்று பாய்ந்து மூன்று முறை குத்தி விட்டான். நான்கு நாட்கள் கழிந்த பிறகு அவர் அல்லாவின் திருவருளில் கலந்து விட்டார்” என்று கூறி முடித்த அந்த விகடன் ஜபாரக்கின் கன்னங்கள் கண்ணிரில் ஊறிப் போயிருந்தன.

“ஆமென்! சாந்தியுண்டாகட்டும் சாந்தி! சாந்தி!” என்று உமார் முணுமுணுத்தான்.