பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

அடைத்து வைத்திருக்கும் மது முழுவதையும் குடித்து வயிற்றை நிரப்பிக்கொண்ட குடிகாரன் போல் காணப்படுவான். இந்தக் குடிகாரத் தன்மையை அடைவதற்கு அந்தப் பைத்தியக்காரனுக்கு ஒரு செல்லாத செப்புக் காசுகூடச் செலவானதில்லை. இதுதான் உமாரைப் பற்றி அவன் உருவாக்கியிருந்த குணச் சித்திரம்.

அடுத்த நாள் காலையில் ஒரு காவற்காரன் வந்து அந்தப் பிச்சைக்காரன் இடுப்பில் தன் செருப்புக் காலால் ஒரு உதைகொடுத்தான். “அழுக்குமுட்டையின் அரசே, தங்களின் பைத்தியக்காரக் கூடாரமடிப்பவன் எங்கே திரிகிறான்?” என்று கேட்டான்.

எரித்து விடுவது போல் அவனைப் பார்த்த பிச்சைக்காரன், உயர்ந்த பதவியில்லாத ஒரு சாதாரண வேலைக்காரன் அவன் என்பதைத் தெரிந்து கொண்டு “மதம் பிடித்த உளறு வாயனே! உன்னையனுப்பியவன் யார்?” என்று பதிலுக்குக் கேட்டான்.

“உன்னுடைய பிணத்தைக் கோட்டை வாசலிலே தொங்கவிட்டுக் காக்கைகள் கொத்தித் தின்னும்படி செய்யக் கூடியவர் யாரோ, அவர்தாம் என்னை அனுப்பினார்” என்று கூறி மற்றும் ஓர் உதை விட்டான்.

“என் கூலி?” என்று அந்த உதையையும் வாங்கிக் கொண்டு பிச்சைக்காரன் கேட்டான். ஒரு வெள்ளி நாணயம் அவன் கைக்கு மாறியது. நீருற்றின் பக்கம் கையைக் காட்டி விட்டு அவன் சென்றவுடன், “உன்னுடைய புதை குழியிலே நாய்கள் வந்து மலங்கழிக்கட்டும்! கழுகுகள் உன் எலும்பைக் கவ்விக் கொண்டு போகட்டும்! ஏழு நரகத்து நெருப்புகளும் உன் உடலை எரித்துச் சாம்பலாக்கட்டும்!” என்று அந்தக் காவற்காரனைச் சபித்தான்!

நீருற்றின் அருகிலமர்ந்திருந்த உமாரை கவனித்துவிட்ட அந்த காவற்காரன், அவனருகில் சென்று, “கோட்டையிலிருக்கும் அதிகாரி உன்னை அழைக்கிறார். உடனே என் பின்னால் வரவும்” என்று உரத்த குரலில் கூறினான்.

அந்தக் காவற்காரனைத் தொடர்ந்து உமார் கோட்டையில் உள்ள முதல் முற்றத்திற்கு வந்தான். அங்கே சேணம் பூட்டிய குதிரைகளின் அருகிலே ஆயுதமணிந்த ஆறு பிரபுக்கள் காத்துக்