பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

95

"அத்தனை புத்தகங்களும் படித்து விடமுடியுமா? கவிதைகள் நிறைந்த ஒரு சிறு புத்தகம் மட்டும் நான் படித்து முடித்திருக்கிறேன்” என்றான் உமார்.

கவிதைகள் என்றதும் யாஸ்மிக்குப் பழைய காலத்துக் காவியங்களும் அவற்றிலே கவிஞ்ர்கள் பண்டைக்கால அரசர்களைப் பற்றியும், குதிரைகளைப் பற்றியும் போர்களைப் பற்றியும் பாடி வைத்திருப்பதாகக் கேள்விப் பட்டது நினைவுக்கு வந்தது.

“அந்தக் கவிதைகளிலே காதலைப் பற்றி ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்டாள்.

“என் இதயத்தின் மூலையிலே இருக்கின்ற ஒரு சிறு குண்டுமணி அளவு காதலுக்குக்கூட அந்தப் புத்தகத்திலேயுள்ள காதல் ஈடாகாது” என்று கூறிய உமார், அவளைத் தன் முகத்துக்கு நேராகத் திருப்பி அவளுடைய கண்களுக்குள்ளே, தன் கண்களைச் சொருகினான், அந்தக் காட்சி அவளுக்கு நினைக்கும் போதெல்லாம் இன்பவேதனையை யுண்டாக்கிக் கொண்டேயிருந்தது.

“வெட்கமா யிருக்கிறது” என்று கூறி விலகிக் கொண்டாள்!

“யாஸ்மி! தோழிமார்களால் அழகு செய்யப்பட்டிருக்கும் பட்டத்து ராணியைக் காட்டிலும் நீ அழகாக இருக்கிறாய்”

“அதுகூடப் புத்தகத்தில் இருக்கிறதா?”

“இல்லை! என் இதயப் புத்தகத்திலேதான் அப்படி எழுதியிருக்கிறது”

“சரி! என் இதயத்திலே என்ன இருக்கிறது? சொல் பார்க்கலாம்?”

“உன் இதயத்திலா? இந்த உமாரின் வேதனைகளைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாத, அலட்சிய மனப்பான்மையும் கொடுந்தன்மையும்தான் இருக்கின்றன”

யாஸ்மிக்கு உமாரைப் பற்றி நினைத்துப் பார்க்கும்போது பெருமையாக இருந்தது. தன் காதலனுக்கு உலகத்தில் மற்ற எவருக்கும் இல்லாத ஒரு பேராற்றலும், அறிவும் இருப்பதை