பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
7. வளர்க நூலகம்!


பள்ளி நூலக விரிவுத்திட்டம்


நூலகத்தலைவர் பள்ளிநூலகத்தைப் பார்ப்பதோடு, நூலக விரிவுக்கான பணிகளிலும் ஈடுபடல் வேண்டும். அப்போதுதான் மாணவர்கள் நூலகத்தின் சிறப்பையும் சீரிய தொண்டையும் நன்கு அறிந்து போற்றுவார்கள். நூலகம் என்பது நான்கு சுவர்க்குள் அடங்கிய ஒன்று என்று ஆசிரியரும் மாணவரும் நினைப்பாராயின் அது தவறு. அண்மையிலுள்ள அத்தனை நூல்களையும் பயன்படுத்துவதே சிறந்த நூலகமாகும். பணச்சுருக்கத்தின் காரணமாக ஒருநூலகத்திலே வேண்டிய நூல்கள் இருக்கா. அதனல் அது அண்மையிலுள்ள பொதுநூலகம், கல்லூரி நூலகம் ஆகியவற்றிலிருந்து நூல்களையும் பருவ மலர்களையும் வரவழைத்து, வேண்டும் ஆசிரியர்க்கும் மாணவர்க்கும் அளித்தல் வேண்டும். இதற்காக நூல்கடன் ஏற்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நூலகத்தின் பணி விரிவடைகிறது. இதனல் மாணவர்கள் தங்கள் நூலகத்தில் மட்டுமல்ல; சமுதாயத்திலும் உறுப்பினர்கள் என்றும், பொதுநூலகத்தையும் பயன்படுத்த உரிமை உடையவர்கள் என்றும் எண்ணத் தலைப்படுவர். பொது நூலகத்துக்குச் செல்வதாலும், அங்கிருந்து நூல்களை எடுத்து வந்து படிப்பதாலும் மாணவர்களின் உள்ளம் விரிவடைகிறது. இவ்வாறு பள்ளிப்பருவத்தில் பொதுநூலகத்தினைப் பயன்படுத்தும் சிறுவர்கள் வாழ்நாள் முழுவதும் அவ்வாறே செய்யத்தலைப்படுவர்.

நூலகத்தலைவர்கள் உள்ளுர் நாளிதழ்களின் தொடர்பு