இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நா. வானமாமலை
11

உயிர்களின் வளர்ச்சி என்ற வரலாற்றில் கடைசிக் கட்டத்தில் தோன்றியவையே இவை. இவை கீழ்த்தட்டிலுள்ள பிராணிகளின் பரிணாம வளர்ச்சியால் தோன்றியவையே. ஒவ்வொரு பிராணி இனமும் தனக்குக் கீழுள்ள பிராணியின் பரிணாம வளர்ச்சியின் விளைவே. இவ்வாறு மிகச்சிறிய ஜீவ அனு முதல், மனிதன்வரை அனைத்தும் பரிணாம வளர்ச்சியின் தொடர்ச்சியே. கல்லிடைச் சின்னங்களை இயற்கை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள். இவ்வாராய்ச்சியின் மூலம் பலகோடி வருஷங்களுக்கு முன்னால் உலகில் வாழ்ந்திருந்த செடிகளையும், பிராணிகளையும் பற்றித் தெரிந்துகொண்டிருக்கிறார்கள். அக்காலத்தில் இருந்த உயிரினங்கள் இன்றிருப்பதுபோல இல்லையென்றும், இத்தனை வகைப்பட்டவையும் இல்லையென்றும் நன்றாகத் தெரிகிறது. முற்காலத்தில் பிராணிகளின் அமைப்பும் சிக்கலானதாக இல்லாமல் எளிதாகக் காணப்படுகிறது. இவ்வாறு காலமென்னும் ஏணிப்படிகளின் வழியாகக் கீழே இறங்கி வருவோம். மிகமிகப் புராதன காலத்தில் தற்காலத்தில் காணப்படும் நுண்ணுயிர்களைப் போல, மிக நுணுக்கமான, சிறிய உயிரினங்களே இருந்தன. அவை மட்டுமே இவ்வுலகில் வாழ்ந்த காலம் உண்டு. இவ்வாறு இன்று உலகிலுள்ள எல்லா உயிரினங்களுக்கும் மூதாதைகளான இந்நுண்ணுயிர்கள் எவ்வாறு தோன்றின? எந்த மூலங்களினின்றும் அவை பிறந்தன?

உலகிலுள்ள பொருள்களின் மாற்றங்களை விடுத்துத் தனியாக உயிரின் தோற்றத்தை விளக்க முற்படும் முறையை இயற்கை விஞ்ஞானம் ஒப்புக்கொள்ளவில்லை. பொருள்களின் மாற்றம் ஒரு கட்டத்தில் உயிரென்னும் புதிய பண்பைத் தோற்றுவிப்பது எப்படி? என்ற கேள்விக்கு விடை


கல்லிடைச் சின்னங்கள்: பழங்காலத்தில் வாழ்ந்த பல பிராணிகளும், செடி கொடிகளும் பல பூமிக்கடியில் புதைந்துவிட்டன. அவற்றின் மீதுள்ள மண்ணும், மணலும் இறுகிப் பாறையாகிவிட்டன. பிராணிகளின் எலும்புகள், பற்கள் முதலியன பாறை நடுவே பாதுகாக்கப்பட்டு, தற்செயலாக தோண்டும்போது அகப்படுகின்றன. இவற்றைக் கல்லிடைச் சின்னங்கள் (fossis) என்று அழைக்கிறோம்.