இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
18
உயிரின்தோற்றம்

உயிரற்ற பொருளின் பல சலனங்கள் காரணமாக உயிர் தோன்றும் கட்டத்தை ஆராயும்போது, அவர்கள் விஞ்ஞான முறையை உதறியெறிந்துவிட்டு 'சந்தர்ப்ப சேர்க்கையால் உயிர் தோன்றியது”, “மர்மமான பெளதிக சக்திகளால் உயிர் தோன்றியது” என்று வாதிக்கத் தொடங்குகிறார்கள். உயிரின் தோற்றத்தை விளக்குவதற்கு, பொருளின் மாறுதல்களின் பரிணாமத்தை விளக்கவேண்டும். அம்மாறுதல் களின் காரணமாக எவ்வாறு உயிர் தோன்றியது என்று காட்டவேண்டும். இவ்வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்தையும் பூரணமாக நிரூபிக்க வேண்டும். இம்மாறுதல்களுக்கு அடிப்படையான விஞ்ஞான விதிகளையும், அவை எப்படி உயிரின் தோற்றமென்னும் பரிணாம மாற்றத்துக்கும் பொருந்தும் என்பதையும் நிரூபிக்க வேண்டும். இது நவீன இயற்கை விஞ்ஞானத்தின் கடமை.