இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

உயிரின்தோற்றம்


வேண்டும். எப்படியாவது அமினோ அமிலங்களை இணைத்தால் நாம் விரும்பும் புரதம் கிடைக்காது. ஒரு மொழியிலுள்ள எழுத்துக்களை எப்படியாவது சேர்த்து ஒரு செய்யுள் செய்ய முடியுமா? செய்யுளில் எழுத்துக்களும், சொற்களும் சேர்க்கப்பட வேண்டிய முறை தெரிந்தால்மட்டுமே செய்யுளை இயற்றுவது சாத்தியமாகும். அதுபோலவே, ஒரு புரதத்தின் தொடரில் எப்படி அமினோ அமிலங்கள் இணைக்கப்பட்டுள்ளன என்பது தெரிந்தால் மட்டுமே அதனைச்சோதனைச்சாலையில் செய்வது சாத்தியமாகும். மிகவும் சுலபமான அமைப்புள்ள சில புரதங்களில் அமினோஅமிலங்களைப் பற்றித்தான் ரசாயனிகள் இன்று அறிந்திருக்கிறார்கள். அதனால்தான் சிக்கலான அமைப்புடைய புரதங்களை இன்று செயற்கை முறையில் சோதனைச் சாலையில் உண்டாக்க முடிவதில்லை. ஆனால் வருங்காலத்தில் சிக்கலான அமைப்புடைய புரதங்களை செயற்கை முறையில் உண்டாக்க முடியும் என்பதில் சந்தேகம் வேண்டியதில்லை. புரதப் பொருள்களைச் செயற்கை முறையில் உற்பத்தி செய்வது சாத்தியமா என்ற பிரச்சனைக்கு இப்பொழுது விடைகாண வேண்டிய அவசியமில்லை; ஆனால் புராதன காலத்தில், நமது உலகின் மேற்பரப்பில், இயற்கையான நிலைமையில் எப்படிப் புரதங்கள் என்ற மிகச் சிக்கலான அமைப்புடைய பொருள்கள் தோன்றின என்பதை அறிந்துகொள்வது நமது பிரதானப் பிரச்சனைக்கு விடைகாண) அவசியம். சமீப காலம்வரை இப்பிரச்சனைக்கு விடை காண்பதற்குத் தேவையான சோதனைச் சான்றுகள் கிடைக்கவில்லை. 1953-ஆம் ஆண்டு வசந்த காலத்தில் இப்பிரச்சனைக்கு விடை காண சில சோதனைகள் நடத்தப்பட்டன. மீதேன், (கரிநீரகம்) அம்மோனியா, நீராவி, ஹைட்ரஜன் ஆகிய வாயுக்களைக் கலந்து, அக்கலவையில் எப்பொருள் உண்டாகின்றன என்று பார்த்ததில் அமினோ அமிலங்கள் உண்டாவதை அறிய முடிந்தது. பூமியின் மேற்பரப்பு தோன்றிய காலத்திலும் மூலப்பொருள்கள் இந்நிலையில்தானிருந்தன.