இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அத்தியாயம் - 4

புராதனக் கடலில் [1]கோயசர்வேட்டின்
தோற்றம்


பூமியின் வளர்ச்சியின் ஒரு கட்டடத்தில் புராதனக் கடல்களில் சிக்கலான அமைப்புடைய சேதனப் பொருள்கள் உண்டாயின என்று முன் அத்தியாயத்தில் கண்டோம். தற்காலத்தில் உயிருள்ளவற்றின் உடல்களை உண்டாக்கும் பொருள்களுக்கும் அவற்றிற்கும் ஒற்றுமையுண்டு. கடலில் கரைந்திருந்த அப் பொருள்களுக்கும், தற்காலத்தில் அவற்றை ஒத்திருக்கும் பொருள்களுக்கும் முக்கியமான வித்தியாசமும் உண்டு.

உயிர் நிகழ்ச்சிகள் நடக்கக்கூடிய பொருளுக்கு ‘புரோடோபிளாஸம்’ என்று பெயர். தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள், ஜீவ அணுக்கள் ஆகிய எல்லா உயிரினங்களுக்கும் இச்சத்து உள்ளது. அது சாம்பல் நிறமானது. தண்ணீரும், புரதங்களும், பல சேதனப் பொருள்களும், சில அசேதன உப்புகளும் உள்ளன. அப்பொருள்களின் வெறும் கலவையல்ல ‘புரோடா பிளாஸம்’. அது நுணுக்கமானதும், சிக்கலானதுமான அமைப்பையுடையது. முதலாவது அது குறிப்பிட்ட அமைப்பையுடையது. அதன் கூட்டணுக்கள் குறிப்பிட்ட வகையில் இணைக்கப்பட்டுள்ளன.


  1. கோயசர்வேட்: புராதனக் கடலில் கரியின் கூட்டுப் பொருள்கள் கரைந்திருந்தன. அவற்றிடையே ரசாயன மாறுதல்கள் நிகழ்ந்து மிகவும் சிக்கலான அமைப்புடைய பொருள்கள் தோன்றின. அவை தயிர் போல கடல் நீரினின்றும் பிரிந்து வெளிப்பட்டன. இத் தயிர் போன்ற திரவத்தில் மிகவும் நுண்ணிய துளிகள் இருந்தன. அவைதான் கோயசர்வேட்.