இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா.வானமாமலை

65


ரசாயன நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் அவற்றின் திறமை காரணமாகவும், எண்ணற்ற மாறுதல்கள் உண்டாகின்றன. உயிருள்ள புரோட்டோபிளாசத்தில் இத்தகைய மாறுதல்கள் பலவகையான, அகநிலைகளாலும், புறநிலைகளாலும் கட்டுப்படுத்தப்படுகின்றன. (அவையாவன: குறிப்பிட்ட வகையான என்ஸைம்கள் இருப்பதும் அவற்றின் அளவும்; சூழலின் அமிலத்தன்மை; ஆக்ஸிஜன் அதிகமாகும் அல்லது குறையும் திறன்; புரோட்டோபிளாசத்தின் குழம்புத் தன்மை; அதன் அமைப்பு முதலியன.) புதிய பொருள்களும் புதிய அமைப்புகளும், புரோட்டோபிளாசத்தில் தோன்றி அதனின்றும் பிரிந்து வந்து ரசாயன மாற்றங்களின் வேகத்தையும் திசையையும் மாற்றுகின்றன. அதன் காரணமாக உயிரினுள் நிகழும் எல்லா நிகழ்ச்சிகளையுமே மாற்றுகின்றன.

ஒன்றை ஒன்று ஊடுருவி நிற்கும், ஒன்றிற்கொன்று தொடர்புடைய பல நிகழ்ச்சிகளின் வளையம் இது. உயிருள்ள புரோட்டோபிளாசத்தில் நிகழும் ரசாயனக் கிரியைகளின் ஒழுங்கு, குறிப்பிட்ட பொருள்களைத் தோற்றுவிக்கிறது. குறிப்பிட்ட பெளதீக―ரசாயன நிலைமைகளையும் அமைப்புகளையும் உண்டாக்குகிறது. இவையனைத்தும் தோன்றியவுடன் புரோட்டோபிளாசத்தினுள் நிகழும் ஆயிரக்கணக்கான மாறுதல்கள், நேரத்தில் ஒழுங்காக இணைக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், ஒரு முழுமையான திட்டத்திற்குட்பட்டும் இருக்கின்றன. இத்திட்டத்திற்கு ஒரு நோக்கமிருக்கிறது. நியதிக்குட்பட்ட சூழ்நிலைக்கேற்ப உயிருள்ளதைப் பாது காப்பதும், புனரமைப்பதுமே அந்நோக்கம்.

அதனால்தான் புரோட்டோபிளாசம் சிதைவு மாறுதல்கள் நிகழ்ந்துகொண்டேயிருப்பினும் இயங்குநிலைத் திட்டமாக இருக்கிறது. அது தன் அமைப்பை பரம்பரை பரம்பரையாக நிலைநிறுத்திக்கொள்கிறது. இந்த அமைப்பின் தனித்தனிப் பகுதிகளின் தன்மையை ரசாயன பெளதீக விதிகள் விளக்குகின்றன. ஏன் சில பொருள்களும், குறிப்பிட்ட அமைப்பும் புரோட்டோபிளாசத்தில் உண்டாகின்றன?