இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

உயிரின்தோற்றம்



அப் பொருள்களும், அமைப்பும் எப்படி ரசாயன மாறுதல்களைப் பாதிக்கின்றன? சிதைவுக்கும், கூடுகைக்கும் உள்ள பரஸ்பரத் தொடர்பு என்ன? உயிருள்ளன எப்படி வளர்கின்றன? எப்படிச் சிதைகின்றன? என்ற வினாக்களுக்கு, ரசாயன பெளதீக இயல்கள் விடையளிக்கின்றன.

ஆனால் ரசாயன பெளதீக இயல்களின் விதிகளைக் கொண்டு மட்டும், உயிர் பொருள்களினுள் நிகழும் மாறுதல்கள் ஏன் ஒழுங்காக நடைபெறுகின்றன? சூழ்நிலை மாறுதலுக்கேற்ப, இவை மாறுபடுவது ஏன் என்ற வினாக்களுக்கு விடைகாண முடியாது. இக் கேள்விக்கு விடைகாண, பொருள்களைப் பரிணாம வளர்ச்சிப் போக்கில் கற்றுணரவேண்டும். உயிரற்ற பொருள்களுக்குப் பொருந்தும் விஞ்ஞான விதிகளுக்கும் மேலான நியதிகளுக்குட்பட்டு, உயிர் தோன்றிற்று; பொருளின் அமைப்பில் ஒரு புதிய சிக்கலான வளர்ச்சிக் கட்டத்தில் தோன்றிற்று.

பல கூட்டணுக்கள் கொண்ட அமைப்புகள் தோன்றிய காரணத்தால், அங்கஜீவி (Organism)களுக்கும், சூழ்நிலைக்கும் இயக்க இயல் முரண்பாட்டு ஒற்றுமை தோன்றிற்று. அதன் விளைவே உயிர். இத் தன்மைகள் உயிர்களின் பிற்காலத் தன்மைகளையும், பரிணாம வளர்ச்சியையும் நிர்ணயித்தன.