பக்கம்:உரிமைப் பெண்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உரிமைப் பெண்

119


பிட்வில்லை. அதனால் காளியப்பன் தனியாக உழுதுகொண்டிருக்கிறான் அதிலே அவனுக்கும் பூரண திருப்தியாக இருக்கிறது. இப்படி நீண்ட நேரம் பாவாத்தாளுடன் தனியாக உரையாடிக்கொண்டும், அவள் அழகிய வதனத்தைப் பார்த்துக்கொண்டும் இருக்க வேறு நல்ல சமயம் வாய்க்குமா? சாதாரணமாக அவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொண்டுதானிருந்தார்கள். பாவாத்தாள் கூலிக்காரி, காளியப்பனுடைய தகப்பனர் பெரிய பண்ணைக்காரர். அவருடைய பண்ணையிலே பன்னிரண்டு மாதமும் ஒன்றிரண்டு பெண்களுக்குக் களை எடுப்பது, மிளகாய் பறிப்பது, பருத்தி எடுப்பது என்று இப்படி வேலை இருந்துகொண்டே இருக்கும். அதனால் பாவாத்தாள் அநேகமாக அந்தப் பண்ணையிலே வேலை செய்து வந்தாள். காளியப்பன் அவளைச் சந்தித்து வார்த்தையாடப் பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன. இருந்தாலும் இவ்வாறு நீண்ட நேரம் தனியாக இருவரும் இருக்கச் சமயம் வாய்ப்பது அருமை.

பண்ணைக்காரனுடைய மகன் என்றாலும் காளியப்பன் வேலை செய்யாமல் இருப்பதில்லை. ஆட்களிடம் வேலை வாங்குவதோடு தானும் அவசியமானபோது எந்த வேலையையும் செய்வான். இப்பொழுது அவன் தன் நெற்றியில் ஊறிக் கன்னத்தில் வழியும் வியர்வையை அலட்சியமாகத் துடைத்துக்கொண்டு ஏர் உழுகிறான். பாவாத்தாள் முன் முனையை எடுத்துத் தலையில் சுற்றிக் கட்டிக்கொண்டு ஒரு கையால் விதைக் கூடையைத் தாங்கி, மற்றொரு கையால் படைக்காலில் விதையைப் போட்டுக்கொண்டு அவன் பின்னால் நடக்கிறாள்.

தனியாக அவளுடன் நீண்ட நேரம் பேசுவதற்குச் சமயம் கிடைத்தால் என்ன என்னவோ சொல்ல வேண்டும் என்று அவன் முன்பெல்லாம் நினைத்துக்கொண்டிருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/124&oldid=1138422" இலிருந்து மீள்விக்கப்பட்டது