பக்கம்:உரிமைப் பெண்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

உரிமைப் பெண்


அத்தை, தன் சொந்தத்தை இன்னுமொரு தலைமுறைக்கு நிலைநாட்டிவிட்டாள்.

காளியப்பன்? அவன் இப்பொழுது சதா குடி வெறியில் மயங்கிக் கிடக்கிறான். அறிவு தெளிவாக இருந்தால் அவனால் சகிக்க முடிவதில்லை. ஆனால் அதன் காரணத்தை யாரும் உணர்ந்துகொண்டதாகத் தெரியவில்லை. “கல்யாணமாகிக் கொஞ்சம் சுதந்திரம் கிடைத்து விட்டால் இந்தக் காலத்துப் பையன்களை இப்படித்தான் கெட்டுப் போகிறார்கள்” என்று தான் எல்லோரும் பேசிக் கொண்டார்கள்.

பாவாத்தாள் விஷயம் ஒரு வகையில் நோக்கினால் இவ்வளவு மோசமில்லை. அந்தப் பூரண நிலவு ஒரு புதிய உயிரை அவள் வயிற்றில் புகுத்திவிட்டது. காளியப்பனுக்குக் கல்யாணமான மறு வாரத்திலேயே இந்த ரகசியம் அவளுடைய அண்ணனுக்குத் தெரிந்துபோயிற்று. அவன் என்ன செய்வான்? விஷயம் வெளியானால் அவன் மானம் போய்விடும்; சமூகக் கட்டுப்பாடு வந்துவிடும். என்னவோ நடந்தது. அவ்வாறு நடப்பது கிராமங்களிலே சகஜம். ஒரு நாள் பாவாத்தாள் துாக்குப் போட்டுக்கொண்டு இறந்துவிட்டதாகச் செய்தி பாவிற்று. “தாய் எதற்காகவோ வைதாளாம்; கோபத்தில் துாக்குப் போட்டுக் கொண்டாள். ரொம்பக் கோபக்காரி அந்தப் பெண்” என்று மக்கள் பேசிக்கொண்டார்கள்.

வேலுச்சாமி கதையைப் படித்து முடித்துவிட்டு ஆவலோடு தலை நிமிர்ந்து பார்த்தான். யாரும் தமது எண்ணத்தைத் தெரிவிக்க முன்வரவில்லை. அனைவரும் நித்திரை மயக்கத்திலிருந்தார்கள். மறுமலர்ச்சி மன்றம் நித்திராதேவியின் முழு ஆதிக்கத்தின் கீழ் இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/129&oldid=1138611" இலிருந்து மீள்விக்கப்பட்டது