பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைநடைக் கோவை கற்ற அளவினானும், இயன்முறை தெரிக்கும் நூற்பாக் களையும் எடுத்துக்காட்டாஞ் செய்யுட் பகுதிகளையும் சொற்பொருள் அறிந்துகொள்ளும் அவ்வளவினானும் புலமை நிரம்புவ தன்று. இவ்வெல்லாம், சிறந்த புலமையின் உறுப்புக்களாமன்றி உறுப்பியாகா. ஒன்றனை ஊன்றிப் படிக்குங்கால் படிக்கப்படுஞ் சொற் குழுவினின்றி உணரப்படும் பொருட்கண் உள்ளம் உறைத்து நிற்ப, சார்ந்ததன் வண்ணமாந் தன்மைத் தாகிய உயிர், அவ் விழுமிய பொருட்கண் பிரிப்பின்றிக் கலந்து அப் பொருட் பயனை நுகர்தலும், நுகர்ச்சிக்குப் பின் வெளியுலகத்து மீண்டு நினைவு கூர்தலும், தீர்ந்த உண்மைகளைக் கடைப்பிடித்துத் தங் குறிக்கோளாக ஒழுக்கியலின் மேற்கோடலும் மேற்காட்டிய உறுப்புக் களோடியையுமாயின், ஒருவாறு புலமை நிரம்பியதாகக் கொள்ளலாம். புலமையின் குறிக்கோள் உலகியற் பொருளளவின் இருப்பின் அது சிறுமை யெய்தி மாசுடையதாகும். அறிவை, ஒளி வலியுடைய தாக்கி அகலமுறச் செய்து, அவ் வகன்ற ஒளி விளக்கத்தின் கண்ணே முன்னர்க் காணப்படாதனவும் உலப்பிலா இன்பவிளைவிற் கேற்றனவுமாகிய அரிய பல நுண் பொருள்களை அகக்கண்ணாற் கண்டு இன்புறுதலாகிய வாழ்க்கையே புலமை வாழ்க்கையாகும். ஓரளவுட்பட்ட சில பல நூல்களை வினவுவார் கருத்துக்கியைய விடையிறுக்கு முகமாகக் கற்றுத் தகுதிச் சீட்டுப் பெறும் அவ்வளவில், புலமை தன் நிறைவை எய்தியதாக எண்ணிவிடலாகாது. பயிலுந் தோறும் பயிலுந்தோறும் பண்புடையாளர் தொடர்பு எங்ஙனம் இனிமை சான்று பயன் விளைக்குமோ