பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதி காலம்


இருபதாம் நூற்றாண்டில் தமிழ் நடை விரிவான பல துறைகளில் பயன்படுவதற்குப் பாரதி வழிகாட்டினார். அரசியல், பொருளாதாரம், கல்வி, விஞ்ஞானம், சீர்திருத்தம், சமூகவியல் முதலிய பல வாழ்க்கைத் துறைகளிலும் தமிழ் உரை நடையின் செல்வாக்கை அவர் பரவச் செய்தார். இக்காலத்தைத் தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சி உதயம் என்று கூறலாம். பாரதி தமக்கு முன் மக்களுக்கு விளங்கும்படி எழுதிய ஆசிரியர்களுடைய நடையில், எளிமையும் உயிர்த் துடிப்பும் தெளிவும் உள்ளனவற்றைத் தமது நடைக்கு முன் மாதிரியாகக் கொண்டார். புதிய பொருள்களைத் தமது முன்னோர்களைவிட எளிய நடையில், உள்ளத்தைத் தாக்கும் முறையில் எழுதினார்.

சீர்திருத்த உணர்வையும் நாட்டுப் பற்றையும் வளர்க்க உணர்ச்சியூட்டும் நடையைக் கையாண்டார். அறிவை அகற்சி செய்யவும் தெளிவு காணவும் தருக்கரீதியான நடையைக் கையாண்டார். இரண்டிலும் எளிமையும் தெளிவும் மிளிர்ந்தன. கட்டுரைகளுக்கு அவர் இலக்கிய அந்தஸ்தை அளித்தார். குறிக்கோளுடன் கதைகள் எழுதினார். கற்பனைக் கதைகளில் தத்துவக் கருத்துக்களை உட்பொருளாக அமைத்தார். எளிமையான நடையையே, கூறும் பொருளின் தன்மைக்கேற்ப, வித, விதமாகக் கையாண்டார். பல்வேறு கடினமான கருத்துக் கனைக்கூட எளிமையான நடையில் விளக்க முடியும் என்பதை அவர் நிரூபித்தார்.

அவர் பல துறைகளிலும் கையாண்டிருக்கும் உரைநடையின் தன்மையைக் காணச் சில எடுத்துக்காட்டுக்களைக் காண் போம்.

கதை சொல்லும் உரைநடை (narrative)

மறு நாட் காலை முதல் முத்தம்மா பாடு கொண்டாட்டமாகி விட்டது. வீட்டில் அவளிட்டது சட்டம். அவன் சொன்னது வேதம். ஸோமநாதய்யர் ஏதேனுமொரு காரியம் நடத்த வேணுமென்று சொல்லி அவள்