பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தற்காலம்


சிறுகதை, நாவல் துறைகளில் தமிழ்ப் படைப்பிலக்கியம் பெருவளர்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்குள் தமிழிலக்கிய வரலாற்றுக் காலம் முழுவதிலும் தோன்றிய எழுத்தாளர்களைவிட அதிகமான எழுத்தாளர்கள் தோன்றியுள்ளார்கள்.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் படிப்பவர் தொகை இருபது பங்கு பெருகியுள்ளது. பத்திரிகைகளின் எண்ணிக்கை பல பங்கு அதிகரித்துள்ளது. புத்தக வெளியீட்டகங்கள் மிகப் பலவாகப் பெருகியுள்ளன.

படித்தவர்களின் தொகை அதிகமாகியிருப்பதால், அவர்கள் படிப்பதற்கெனப் பலவகையான சுவைகொண்ட நூல்களும் பத்திரிகைகளும் தேவைப்படுகின்றன.

இந்தத் தேவைகளைப் பயன்படுத்திக்கொண்டு, முதலாளி கள் லட்சக்கணக்கான பிரதிகள் விற்கக்கூடிய பத்திரிக்கைகளை நடத்துகிறார்கள். தரமான இலக்கியம் தேவை என்ற கருத்துக் கொண்ட சிலர் 1000 முதல் 5000 வரை விற்பனையாகும் பத்திரிகைகளை நடத்துகிறார்கள். வெகுஜனப் பத்திரிகைகள் (Mass, circulated), முதலாளிக்கு லாபம் என்ற நோக்குத் தவிர, பாமர மக்களின் தாழ்ந்த ரசனைக்குத் தீனி போடுவது என்ற உள்நோக்கமும் உடையன. தரத்தை உயர்த்தும் நோக்கம் விற்பனையதிகமில்லாத பத்திரிகைகள், சில இலக்கியக் கொள்கைகளின் ஆர்வலர்கள், கவனித்துப் படிக்கும் வாசகர்களைக் (Serious readership) கொண்டுள்ளன. இவர்கள் சிறுபான்மையோராயினும், தமிழ்நாட்டின் தரமான இலக்கிய வளர்ச்சிக்கு இவர்களே முன்னோடிகளாக இருக்கப் போகிறார்கள். மணியன், சாவி முதலியவர்கள் வாழ்க்கைக் குறிக்கோளே ஆறு லட்சம் பிரதிகள் விற்பனையாகவேண்டும். என்பதுதான், இந்த வளர்ச்சி ஒரே சீராகவும் இலக்கியவாதி விரும்புகிற திசையிலும் இல்லாவிட்டாலும், பாரதி காலத்தைவிட மிகவும் மாறிய, (பெருக்கத்திலாவது) படிக்கிறவர்கள் அதிகரித்துள்ள திலைமை ஏற்பட்டுள்ளது.