பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

7


போன்ற இலக்கியங்களிலும் இதழ்கள்-ஏடுகள் போன்றவற்றிலும் இந்திலை கண்கூடாகத் தெரிகின்றது.

தமிழ் இலக்கிய-இலக்கண வனம் கொண்ட மொழியாக இருந்தாலும், அடிப்படை வேர்ச் சொற்கள் பல்கிக் கிடந்தாலும், பயன்பாடுதான் புதிய சொற்களை, ஏற்றவகையில் உருவாக்கித் தர முடியும். இந்த வகையில், அடுத்தடுத்து, தொடர்ந்த பயன்பாடுகளால் இலக்கிய நடையும் இதழியல் நடையும் செப்பமுற்று, செழுமை பெற்று வளர்ந்தன.

‘தினமணி’ ஆசிரியராக இந்த டி. எஸ். சொக்கலிங்கம் 1940 அளவில் எழுதியிருப்பது இங்கு நோக்கத்தக்கது:

‘இன்டர்நாஷனல் சிட்வேஷனைப் பற்றி ஜவாஹர்லால் அனலைஸ் பண்ணினது ஒண்டர்புலாய் இருந்தது’ என்று சொல்ல வேண்டிய அவசியமே தற்சமயம் இல்லை. அப்படிப் பேசினால் ஆங்கிலம் தெரியாத தமிழருக்குப் புரியவே புரியாது. எல்லாத் தமிழருக்கும் புரியக்கூடிய விதத்தில் ‘சர்வதேச நிலைமையைப் பற்றி ஜவாஹர்லால் ஆராய்ச்சி செய்து பேசியது அற்புதமாய் இருந்தது’ என்று சுலபமாய்ச் சொல்லலாம். இவ்வளவுக்கும் காரணம் தமிழ் பத்திரிகைகள்தான்.

இன்று ‘சர்வதேச நிலை’ என்பதற்கு ‘உலக நிலை’ என்றும் ‘அற்புதம்’ என்பதற்கு ‘வியப்பு’ என்றும் எழுதுகின்ற வளர்ச்சி வாய்த்திருக்கின்றது. ‘சுதேசமித்திரன்’ இதழில் துணையாசிரியராக இருந்த குருமலை சுந்தரம் பிள்ளை 1907ஆம் ஆண்டு வெளியான தமது ‘ஜி. சுப்பிரமணிய ஐயர் சரித்திரம்’ என்ற நூலில் குறிப்பிடுவது பொருத்தமாக அமைகிறது:

சுதேசமித்திரன் பத்திராதிபர் எழுதும் தமிழ் நடை அவ்வளவு செவ்வையாக இல்லை என்று சிலர் குறை கூறுகின்றனர். சுதேசமித்திரன் தமிழ்நடை அழகாய் இல்லை என்பது சிறிது உண்மையேயாயினும் அக்குறையைப் பத்திராதிபர் மீது ஏற்றுவதினும் நமது பாக்ஷையின் மீது ஏற்றுவதே பெரிதும் நியாயமாகும். ஏனெனில், நமது தமிழ்ப் பாஷையானது முக்கியமாய் மத சம்பந்தமான விஷயங்களுக்கும் பாடல்களுக்கும்தான் இயைந்ததாயிருக்கிறதேயன்றி ராஜாங்க சம்பந்தமான விஷயங்களைத் தெளிவாய் வெளியிடற்கேற்ற சொல் வளமும், விசாலமும், இளக்கமும் அதனிடம் இல்லை...

...இக்குறை மித்திரன் ஆரம்ப காலத்தில் இருந்திருப்பினும் இப்பொழுது நமது ஐயர் தமிழ் வசன நடையில் தக்க தேர்ச்சியடைந்துவிட்டாரென்றே எண்ணுகின்றேன்.