பக்கம்:உலகத்தமிழ்.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

உலகத் தமிழ்


சாதாரண நிகழ்ச்சி. ஏதோ பணக்காரர்கள் மட்டுமே இப்படிச் செய்கிறார்களா? இல்லை; எல்லோருமே இப்படித் தான்.

முதல்தேதி வாங்கிய முந்நூறு ரூபாய்களைக் கையில் வைத்துக்கொண்டு, மூன்றாவது வாரம் வரை செலவு செய்துவிட்டு, நான்காவது வாரத்திற்கு நான்கு பக்கமும் பார்க்கும் நம் நிலை நினைவிற்கு வந்தது. வாழத் தெரிந்தவர்களைப் போல, நாமும் மாதச் சம்பளத்தை வங்கிக் கணக்கில் வரவுசெய்யச் சொல்லிவிட்டு, அவ்வப் போதைக்கு வேண்டியதை மட்டும் வாங்கிக் கொள்வது முறைக்கு வந்துவிட்டால் எப்படியிருக்கும்? இப்படி ஒரு கேள்வி பிறந்தது.

“நன்றாயிருக்கும் குறைந்த பட்சம் நான்காம் வாரத்தின் நான்கு நாள் செலவு வரையிலாவது அந்த முர்நூறு ருபாய் ஊதியம் நீளும்,” என்பது பதில். இதில் அற்புதம் ஒன்றுமில்லை.

‘எவ்வளவு ஊதாரியானாலும், கையில் ரொக்கம் வைத்துக்கொண்டு செலவு செய்யும்போது வரும் தாராளம், வங்கியிலே இருந்து வாங்கிச் செலவு செய்யும் போது வருவதில்லை’ என்பது விளக்கம்.

மதுரை டி. வி. எஸ். உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் அனுபவம் எங்கள் பேச்சை வளர்த்தது. என்ன செய்தார்கள் அவர்கள்? எலலோரையும் போல, அவர்களும் மாதச் சம்பளத்தைக் கையிலே பெற்றுக்கொண்டிருந்தார்கள். வீட்டிலே பூட்டி வைத்துக்கொண்டு செலவு செய்துவந்தார்கள். எல்லோரையும் போல அவர்களுக்கும் போதாமை, மாதந்தோறும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/37&oldid=480796" இலிருந்து மீள்விக்கப்பட்டது