பக்கம்:உலகத்தமிழ்.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உல்லாசப் பயணம்

41


மறுநாள் காலையிலே சிதம்பரநாதன் காரில் அவர், அவரது மனைவி, அவரது மகன் குமார், நான் ஆகிய நால்வரும் புறப்பட்டோம். கார் சிட்டெனப் பறந்தது.

சென்னையில் நாற்பது கிலோ மீட்டர்களுக்கு மேலும் வெளியூர் நீண்ட பயணத்தில் ஐம்பது கிலோ மீட்டர்களுக்கு மேலும் காரை வேகமாக ஒடவிடுவதில8ல. அவ்வளவு குறைந்த ஓட்டத்திலும் என் கண் சாலையின் மேலேயே இருக்கும்; அடிக்கடி ‘பார்த்து, பார்த்து’, என்று காரோட்டியை நச்சரிப்பேன்.

ஜினிவா-அன்னசி சாலையில், தொண்ணுறு, நூறு கிலோ மீட்டர் வேகத்தில் காரை ஒட்டினார் சிதம்பரநாதன். அதை நான் பொருட்படுத்தவில்லை. அங்கே திடீரெனத் துணிச்சல் வந்துவிட்டதா? அப்படியொன்று மில்லை. ஆபத்து இருந்தால் அல்லவா துணிச்சல் தேவைப்பட?

நடுத் தெருவில் நின்று பழைய கதை பேசுவோர் கிடையாது. அங்கெல்லாம் வண்டி வழி வண்டிக்கே; நடக்கும் ‘மன்னருக்கு’ நடை பாதையே. ‘பிரேக்கை’ சோதிக்கும் எருமை தெருவிலே வராது. பயமறியாத இளங்கன்றும் சாலையிலே ஓடாது. ஆட்டுக் குட்டி துள்ளியோட இடம் வேறு. எங்கிருந்தோ சட்டென்று தாவித் தொடரும் நாயும் நடுத்தெருவில் தலை காட்டாது. கட்சி மாறிகள் போல் ஒடும் காரோட்டிகள் இலர். வாகனச்சாலை வாகனங்களுக்கே அதிலும் விரைவு வழி விரைவு வண்டிகளுக்கே மெள்ள ஒட்டுவோர்க்கத் தனி வழி. இந்நெறிகள் கண்டிப்பாகப் பின்பற்றப்படுகின்றன. எனவே எவ்வளவு விரைந்து சென்றாலும் மெத்தென இருக்க முடிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/40&oldid=480800" இலிருந்து மீள்விக்கப்பட்டது