பக்கம்:உலகத்தமிழ்.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோட்டைவிட்ட கோட்டை

49

புறங்களைக் காணவேண்டுமென்பது எங்கள் நோக்கம். அது நிறைவேறிற்று. பல ஊர்களைப் பார்த்துக்கொண்டு சென்றோம். வழியில் ஓரூரில், ஏரிக்கரையோரம் புல் வெளியில் இருந்து பகலுணவு உண்டோம்.

கிச்சிலிப்பழச் சாதம், தயிர்ச்சோறு, உருளைக் கிழங்குப் பொரியல், அப்பளம், ஊறுகாய் பகல் உணவாயின. சாப்பாட்டிற்கு முன்பு, பழச்சாறும் அருந்தினோம். சாப்பாட்டிற்குப் பின், ஐஸ்கிரீம். இத்தனையும் வீட்டிலிருந்து எங்களோடு வந்தன.

லூசேன் என்ற நகரத்தைத் தாண்டி, குருயர் அணைக்குச் சென்றோம். அந்நாட்டின் பெரிய அணை அது. அணையைவிட வழியிலுள்ள ஊர்களும் காட்சிகளும சிறந்தவை.

அணையை விட்டுப் பல கிலோ மீட்டர் சென்றதும் குருயர் என்ற ஊரை அடைந்தோம்.

இவ்வூர் உயர்ந்த மேட்டுப் பூமியில் உள்ளது. மிகத் தொன்மையான ஊர். பழைய கோட்டையொன்று இங்கே இருக்கிறது. அதற்குள் இரண்டு மாடி அரண்மனை. கோட்டையையும் அரண்மனையையும் காண வருவோர் கூட்டம் பெரிது.

ஊரை நெருங்கியதும், ஊருக்கு வெளியே வாகனங்கள் தங்குமிடத்தைக் கண்டோம். அங்கேயே காரை நிறுத்திவிட்டோம். ஏன் தெரியுமா? ‘தங்கள் ஊருக்குள் யாரும் காரில் வந்து தொல்லை கொடுக்கக்கூடாது; வயதானவர்களும் குழந்தைகளும் அச்சமின்றி நடமாட வேண்டும்’ என்பது அவ்வூரார் கருத்தாம். அப்படியே விதித்துவிட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/48&oldid=480998" இலிருந்து மீள்விக்கப்பட்டது