பக்கம்:உலகத்தமிழ்.pdf/52

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உலகப் பல்கலைக்கழகப் சேவை

53


முன்னர் மாட மாளிகைகளாக எழுந்து நின்றவை போரின் முடிவில் கற்குவியல்களாக, பிணங்களை அடக்கிக் கொண்டிருக்கும் குவியல்களாயின. பெரும் பெரும் ஆலைகளெல்லாம் நாற்றமடிக்கும் இடிபாடுகளாயின. கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் இத்தகைய அழிவிலிருந்து தப்பவில்லை. கல்லூரிகள் இருந்த இடத்தைக் கண்டுபிடிக்க இயலவில்லை. வகுப்பறைகளைக் காணோம் விடுதிகளைக் காணோம். படிக்க நூல்கள் உண்டா? அவையும் அழிந்து போயின. விளக்கு உண்டா? முயன்று உற்பத்தி செய்தாக வேண்டும். இவை கிடக்கட்டும்; உண்ண உணவு கிடைத்ததா? மாணவர்க்காவது உடுத்த உடையுண்டா? போட்டுக் கொள்ள காலணி எங்கே? நாளெல்லாம் அல்லற்பட்ட மாணவர் சமுதாயம் படுத்து உறங்கவாவது இடமுண்டா?

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம். இதோ ஒரு பல்கலைக் கழகத்தின் நிலை:

வியன்னா பல்கலைக் கழகம். அங்கே பதினையாயிரம் மாணவ மாணவியர். அவர்களில் ஆயிரத்து நானூறு பேர் பெண்கள். அவர்களுக்கு ஒரே வேளை உணவு. சுரீரென்று தைக்கும் பனித்தரையில் வெறும் காலோடு நடக்க வேண்டிய நிலை பலருக்கு. மேலும் பலருக்கு ஒட்டைகள் நிறைந்த காலணி உடையாவது போதிய அளவு உண்டா? இல்லை. மாற்றுடை இல்லாதவர்களே பெரும்பாலோர், உறங்கும்போது வேற்றுடை இல்லை. எங்கே உறங்கினார்கள் தெரியுமா? பலருக்குக் படுக்கை அறை கிடையாது. எனவே, புளி முட்டைகள் போல் கழிவறைப் பாதைகளில்கூட உருண்டு உறங்கினார்கள். இன்னும் என்ன கொடுமை வேண்டும்! இத்தனை கொடுமைகளின் விளைவாக நோய்கள் தாக்கி உலுக்கின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/52&oldid=481002" இலிருந்து மீள்விக்கப்பட்டது