பக்கம்:உலகத்தமிழ்.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

உலகத் தமிழ்


இருக்குமென்று கருதப்பட்டது. முதியோர் கல்வி அத்தகைய சேவையின் முளையாகத் தோன்றிற்று.

1969ஆம் ஆண்டு, டிசம்பர் திங்கள் சென்னை நகரில் கூடிய முதியோர் கல்விக் கருத்தரங்கில், என்னால் படைக்கப்பட்டு, கருத்தரங்கால் செப்பம் செய்யப்பட்ட, ‘தமிழ் நாட்டிற்கான முதியோர் கல்வி ஐந்தாண்டுத் திட்டம்’ நினைவில் மின்னிற்று. அதன் உருவம் என்ன?

தமிழ் நாட்டின் மக்கட்தொகை மதிப்பு நான்கு கோடி தமிழ் நாட்டில் எழுதப் படிக்கத் தெரியாதவர் மதிப்பு நூற்றுக்கு அறுபது விழுக்காடு. இவ்வளவு பெரிதா என்று திகைக்காதீர்கள். இரண்டு கோடிப் பேருக்குமேல் நம் செந்தமிழ் நாட்டில், தேன்மொழியாம் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட நம் உடன்பிறப்புகள் தற்குறிகள்!

வறுமையினால் ஒரு தமிழன் கற்கவில்லையென்றல் இங்குள்ள எல்லோரும் நாணவேண்டும். என் ஆணை யன்று; பாவேந்தர், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆணை, தாசரின் தாசர்களாகிய நமக்கு இட்ட ஆணை.

எழுதப் படிக்கத் தெரியாதவர்கள், ஐந்து வயதிற்கு உட்பட்டவர்களும் உண்டு; தள்ளாதவர்கள் உண்டு. எழுத்தறிவு இயக்கத்தை எந்நாட்டில் தொடங்கினாலும், பச்சைக் குழந்தைகளையும் பாட்டன் பாட்டிகளையும் கணக்கில் சேர்க்காமல் விட்டுவிடுவது வழக்கம். சாதாரணமாகப் பதினைந்து முதல் நாற்பது வயதுக்குள் அடங்கியவர்களுக்கே எழுதப் படிக்கக் கற்றுக் கொடுப்பது வழக்கம்.

இம் மரபுப்படி 15-40 வயதினர் ஒரு கோடிப் பேருக்கு-எழுதப் படிக்கத் தெரியாத ஒரு கோடிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/57&oldid=481007" இலிருந்து மீள்விக்கப்பட்டது