பக்கம்:உலகத்தமிழ்.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

உலகத் தமிழ்


யென்று சொன்னார்களே? அது எவ்வளவு உண்மையோ! எதிரில் மாநாட்டுப் பிரதிநிதிகள் சிலர் அமர்ந்திருந்தனர். இலங்கைப் பிரதிநிதிகள் இருவர், நம் டாக்டர் மு. வ. ஆகியோர் இருந்தனர். அவர்களோடு அளவளாவினேன். சில நிமிடங்களில் -

‘உங்களுக்குச் சிவப்பு வண்ணப் பை இருக்கலாமா அல்லது நீல வண்ணப் பையே வேண்டுமா?’ என்று கேட்டார் அங்கிருந்த மற்றொருவர்.

‘சிவப்பைக் கண்டு மிரள்கிறவன் அல்லன் நான். எந்த வண்ணத்திலும் இருக்கலாம், எனக்குக் கொடுப்பது’ என்றேன்.

சிவப்புப் பை கிடைத்தது. அதில் மாநாட்டுக் கட்டுரைகளும், கால அட்டவணையும் சில தகவல்களும் இருந்தன. அடுத்த நாள் பாரிசில் நடக்கவிருந்த தேசியத் திருநாள் அணி வகுப்பைப் பார்க்க நுழைவுச் சீட்டும் இருந்தது.

வேலை செய்கிறவர்களைக் கெடுக்கக் கூடாதல்லவா? எனவே நெடுநேரம் அங்கே தாமதிக்காமல் திரும்பி விட்டோம்.

அங்கிருந்து பேராசிரியர் காசியின் வீட்டிற்குச் சென்றோம். அது பாரிசின் வெளிப்புறத்தில் உள்ளது. பாதாள இரயிலில் செல்லுவதற்கே அரை மணிக்கு மேல் பிடித்தது.

அவரது இல்லத்தில் இந்திய உணவு கிடைத்தது அதை முடித்துக்கொண்டு ஒட்டலுக்குத் திரும்ப நள்ளிரவு ஆகிவிட்டது. ஒட்டல்வரை காசி என்னுடன் வந்தார். ஆகவே சமாளித்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/63&oldid=481099" இலிருந்து மீள்விக்கப்பட்டது