பக்கம்:உலகத்தமிழ்.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10. நாசக் கருவிலே மானுடம்

டுத்த நாள்-அதாவது ஜூலை 14ஆம் நாள்; பிரஞ்சு மக்களுக்குத் தேசியத் திருநாள்; வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட நன்னாள்; புரட்சிப் பெருநாள். 1789 ஆம் ஆண்டில் ஜூலை 14 ஆம் நாளன்று வாழ்வு கெட்டு, வறுமை மிஞ்சி, வேறு வழி யேதுமின்றிப் பிரஞ்சு மக்கள் கிளர்ந்து எழுந்து சென்று பாஸ்டீல் என்னும் மையச் சிறையைத் தாக்கி உடைத்துத் தகர்த்துத் திறந்த நாள். புரட்சியின் தொடக்க நாள். மன்னராட்சியைக் கவிழ்த்துவிட்டு மக்களாட்சியை அமைத்த பிரஞ்சுப் புரட்சியின் தொடக்க நாள். மக்களாட்சி அமைந்த பிறகு வரலாற்றுச் சிறப்புடைய இந்நாளை ஆண்டாண்டுதோறும் திருவிழாவாகக் கொண்டாடி வருகிறார்கள். அன்று எல்லா அலுவலகங்களுக்கும் விடுமுறை. பணிமனைகளுக்கும் அதுவே. கடைகளுக்கும் விடுமுறை பெரும்பாலும் உணவுச்சாலைகளுக்கும் அப்படியே. எல்லா உணவுச் சாலைகளையும் மூடுவதில்லை. எல்லா நகரங்களிலும் உணவுச் சாலையையே நம்பி வாழ்வோர் ஏராளம். உணவுச்சாலைகள் அத்தனையும் மூடிக் கிடந்தால் ஏராளமானவர்கள் பட்டினிதானே! பல்லாயிரக்கணக்கானவர்களைப் பட்டினி போட்டா திருவிழா கொண்டாடுவது! பட்டினி வாட்டம் ஏற்படாதபடி தெருவுக்குத் தெரு, சில உணவுச் சாலைகளை மட்டும் திறந்துவைக்க, உரிமையாளர்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொள்கின்றார்கள். அடியோடு ஓட்டல் மூடு விழா அன்று இல்லை.

அன்று போக்கு வரத்து நிலை எப்படி? நாட்டுத் திருவிழா என்று சொல்லி, எல்லோரையும் நடராசர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/64&oldid=481100" இலிருந்து மீள்விக்கப்பட்டது