பக்கம்:உலகத்தமிழ்.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

உலகத் தமிழ்

எந்நாளோ? அந் நாள் விரைவதாக!’ என்ற உளத்தால் வழுத்தினேன்.

பறந்துகொண்டிருக்கையில் அந்தத் தமிழ் இளைஞர் என்னிடம் வந்து புன்முறுவலோடு நின்றார். "தங்களைக் கல்வி இயக்குநராகவே அறிவேன். புரசை புனித பால் உயர்நிலைப்பள்ளியில நான் படித்தபோதே தங்களைத் தெரியும். தங்களுக்கு என்ன உதவி வேண்டும்? என்று அன்போடு கேட்டார். இயக்குநரை நினைக்கிறவர்களும் உள்ளார்களே என்று உணர்ந்து மகிழ்ந்தேன். அந்த இளைஞர் பெயர் திருமலை. புரசைப்பாக்கத்தைச் சேர்ந்தவர் என்று தெரிந்து கொண்டேன்.

ஊர்தி வானத்தை எட்டியதும், பழச்சாறு வழங்கப்பட்டது. அதைச் சுவைத்துக் குடித்து முடித்ததும், காலைச் சிற்றுண்டி பரிமாறத் தொடங்கினர். சிற்றுண்டி பேருண்டியாகவே இருந்தது. முதலில் பலவகைப் பழக் கலவை; அடுத்து 'சிரயல்ஸ்'- அதாவது, பாலில் ஊற வைத்து உண்ணும் சோளப்பொரி, பிறகு பூரியும் கொண்டைக்கடலைக் கறியும்; உப்புமா, காய்கறி; கட்லட் இன்னும் முடியவில்லை. ஒரு தட்டுத் தயிர்; பர்பி; பாலடை; பழம்; காப்பி அல்லது தேநீர். இத்தனையும் சேர்ந்ததே சிற்றுண்டி பெயருக்கும் பொருளுக்கும் பொருத்தமுண்டா!

சிற்றுண்டி முடியும் சமயம்.

இப்போது அகமதாபாத்திற்கு மேலே பறக்கிறோம். இருபத்தைந்தாயிரம் அடி உயரத்தில் இருக்கிறோம். தில்லியில் பளிச்சென்று வெளிச்சமாயிருக்கிறது என்று விமானமோட்டி அறிவித்தார்.

சிற்றுண்டி களைப்புத் தீருமுன் தில்லியை அடைந்து விட்டோம். குறித்த நேரத்தில் சேர்ந்துவிட்டோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/9&oldid=481932" இலிருந்து மீள்விக்கப்பட்டது