பக்கம்:உலகத்தமிழ்.pdf/93

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

உலகத் தமிழ்


வழியே வந்தவை என்றார். இந் நூற்றாண்டின் தொடக்கத்தில் துப்பறியும் நாவல்கள் பல வந்தன என்றார். ரங்க ராஜூ, வடுவூர் துரைசாமி அய்யங்கார், பண்டிதர் அருணகிரிநாதர் ஆகியோர் எங்கள் நினைவிற்கு வந்தனர். கல்கி அவர்களின் வரலாற்றுப் புதினங்களும், டாக்டர் மு.வ வின் நூல்களும் கவனிக்கத்தக்கன என்றார். மு.வ. வின் நூல்கள் பண்டைத் தமிழ்ப் பாடல்களில் காணும் ஒழுக்க இலட்சியங்களை விளக்குவன என்றார்.

சிறுகதைகளின் காலம் குறுகியது என்று கூறி, ‘பரமார்த்த குருகதை’ முதலியவற்றை நினைவு கூர்ந்தார். புதுமைப் பித்தனின் எழுத்துகளை விரிவாகக் கவனிக்க வேண்டுமென்றார்.

தமிழில் புதினங்கள், சிறுகதைகள் வளர்ந்த அளவு நாடகங்கள் பெருகவில்லை என்பது ஆஷர் கருத்து. ஆயினும் தமிழில் பல உரைநடை நாடகங்களும், பாட்டு நாடகங்களும் உள்ளன என்று ஒப்புக்கொண்டார். சினிமாக் கதைப் பெருக்கத்தையும் மறக்கக் கூடாது என்றார். மேடைத் தமிழ் எழுத்துத் தமிழ் வளர்ச்சிக்குத் துணையாவதையும் குறிப்பிட்டார்.

தான், தமிழ் நாட்டில் வளர்ந்து வரும் தமிழ் இலக்கியத்தின் தன்மைகளைக் காட்டியதால் பிற இடங்களில் தமிழ் இலக்கியம் உருவாகவில்லையென்று பொருளல்ல. இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளிலும் தமிழ் இலக்கியம் வளர்கிறது. தமிழ் இலக்கியத்தில் மேனாட்டுக் காற்று சிற்சில சமயம் வீசினாலும் சிறந்த தமிழ் நூல்களில் மொத்தத்தில் தமிழ் மணமே கமழ்கிறது’ என்று ஆஷர் முடித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/93&oldid=481244" இலிருந்து மீள்விக்கப்பட்டது