பக்கம்:உலகத்தமிழ்.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்விபற்றிக் கவி பாரதி

83

ஆகாது. அது தேர்ந்த கல்வியாக வேண்டும். கல்விப் பெருங்கடலாக விளங்க வேண்டும். அதில் மாணவர் தமக்கு வேண்டியதைத் தேடிப் பெற வேண்டும் மற்றவர் உமிழ்வதை அள்ளிக் கொள்வது கல்வியா என்ன?

பாரதி, ‘தேடுகல்வி’ என்று கூறுவதை ஆழ்ந்து உணர்வோம். ‘ஓது பல்பலநூல்வகை’ என்று ஆணையிடுவதையும் சிந்திப்போம். அத்தகைய தேடிப் பெற்ற கல்வியின் விளைவு எதுவாக வேண்டும்? பல்கலைத் திறமையாக, பல்விதமாயின சாத்திர வழியாக விளைய வேண்டும். அத்தகைய கல்வி, வாழ்க்கைக் கல்வி. இத் தகைய கல்வியைப் பெற்றாரா பாரதியார்?

அவர் பெற்றது குறுகிய கல்வி. வாழ்க்கைக்கு உதவாத கல்வி; அடிமை உணர்ச்சியை ஊட்டும் கல்வி; பயனற்ற கல்வி. தாம் பெற்ற கல்வியை, ‘பேடிக்கல்வி’ ‘அற்பர் கல்வி’, ‘மண்படு கல்வி’ என்றெல்லாம் குறை கூறுகிறார் பாரதியார், தம் பள்ளிக்கூடக் காலத்தைப் பற்றிப் பாடும்போது.

‘தந்தைக்கு ஓராயிரம் செலவு. ஆயினும் தனக்கு எள் துணையும் பயனில்லை’ என்று வேதனைப்படுகிறார் பாரதியார்.

‘கல்வி பயனற்றதாக உள்ளதே! இதை அழித்து விடு, என்று கூறவில்லை பாரதியார். மாறாக, கல்வியை எல்லோருக்கும் உரிமையாக்க ஆணையிடுகிறார், பழமைப் பிடிப்பால் கல்வியை அலட்சியப் படுத்துபவர்கள் இருப்பார்கள் என்பதை உணர்கிறார். அவர்கள்மீது பொங்கியெழுகிறார். கல்வியிலாதோர் ஊரைத் தேடிக் கண்டு பிடிக்கக் கட்டளையிடுகிறார். அதைச் சுட்டுப் பொசுக்கி விடச் சொல்லுகிறார், அத்தகைய ஊர் அவமானத்தின் அடையாளம் என்று கருதினர் போலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகத்தமிழ்.pdf/96&oldid=481247" இலிருந்து மீள்விக்கப்பட்டது