பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

புரட்சி செய்த

யின் நடுவில் அனுப்பியதால் ஆராத் துயரடைந்த சகோதரன், என்ன செய்வதென்றே தெரியாமல் புலம்பினர். யூதர்கள் தீண்டத்தகாதவர்களாகக் கருதிய பிரெஞ்சு நாட்டில் இவர்கள் துக்கத்தைத் துடைக்க யார் முன்வருவார்கள். யாரிடம் குறைகளைச் சொல்வார்கள். ஒரு சக்தி வாய்ந்த இராணுவ மன்றம் கொடுத்த தீர்ப்பை எதிர்த்து வழக்காட எங்கு செல்வது என்ற நிலையில், தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில், ஒருநண்பன் சொன்ன யோசனையின் பேரில் ஒருவனே முன் வந்தான். தன் உயிர் போகுமே என்ற கவலைப் படாமல் முன் வந்தான். டிரைபஸ் யார் என்று அறிமுகமில்லாத ஒருவன் முன்வந்தான். விவகாரம் மனிதனைப் பற்றியதல்ல. தாய்நாட்டின் மேல் சுமத்தப்பட்டிருக்கும் துயரைத் துடைக்க முன் வந்தான். யாருக்காகவோ போராடுகிறோம் என்றில்லாமல், ஒரு உண்மைக்காக போராடுகிறோம் என்ற உறுதியில் கையில் பேனாவோடு முன் வந்தான். அவன்தான் எழுத்து வேந்தன் எமிலிஜோலா.

நடந்துவிட்ட விபரீதத்தைப் பொறுமையாகக் கேட்டான். தான் நடத்தி வந்த பிகாரோ பத்திரிக்கை அலுவலத்தில் உட்கார்ந்தான். குடியரசுத் தலைவருக்கு ஒரு கடிதம். இளைஞர்களுக்கு ஒரு கடிதம். மக்களுக்கு ஒரு கடிதம். ஆக மூன்று கடிதங்களை எழுதி வெளியிட்டான்.

1. குடியரசுத் தலைவருக்குக் கடிதம்

பெருந்தன்மை பொருந்திய குடியரசுத் தலைவர் அவர்களே!

உங்கள் கீழ்படிதலுள்ள எமிலிஜோலா மிகுந்த அடக்கமாக எழுதம் கடிதம்.

பல போர்களில் வெற்றிகண்ட இராணுவத் தலைவன் டிரைபஸ் பேரில் மிக கொடுமையிழைத்து விட்டிருக்கிறது இராணுவ நீதி மன்றம். அவன் தண்டனை அடையும் வரையில் ஒரு சிறிய குற்றத்தையும் செய்தறியாதவன். தான் பிறந்த நாட்டின் மேல் அவன் கொண்டிருந்த நட்பைவிட