பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உத்தமர்கள்

111

அவன் தோற்றுவிட்டானே என்று சுத்த வீரன் அலெக்சாண்டர் கேலி செய்யவில்லை. அவன் வீரத்தைக் கண்டு பாராட்டினான். கை குலுக்கினான். “புருடோத்தமா! நீயே சுத்த வீரன். உன் தாயகம் அவமானம் அடைந்துவிடுமோ என்ற கவலையில், நீ உன் சொந்த அவமானத்தையும் பொருட்படுத்தவில்லை. நீயல்லவா தாய் நாட்டுப் பற்றுடையவன். உன் வீரத்தை மெச்சுகிறேன். உன்னிடம் நான் பெற்ற நாட்டை உன் வீரத்திற்குக் காணிக்கையாகத் திருப்பித் தந்துவிட்டேன். இனி நாம் வீர நண்பர்கள்” என்று வாழ்த்தினான். இந்த நேரம் சந்திரகுப்தனின் மெளரிய சாம்ராச்சியத்தைக் காண வாரீர் என்றழைத்தான் சாணக்கியன். சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கும்போது நவநந்தர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி வந்தது. இந்தச் சாணக்கியன்தான் அமைச்சர்களுக்கு முப்பத்திரெண்டு லட்சணங்கள் இருக்கவேண்டுமென்று கூறுகிறான். அவற்றில் முக்கியமானவை-அவன் அந்த நாட்டிலேயே பிறந்தவனாக இருக்கவேண்டும். அறிவு, ஊக்கம், திறமை, சீலம், அனுபவம் முதலியன உடையவனாயிருக்க வேண்டும் என்றும் கூறுகிறான்.

திருவள்ளுவர் அமைச்சர்களின் லட்சணங்களையும், அரசர்களின் லட்சணங்களையும், நல்ல நாடு எது என்பதையும் கீழ் வரும் குறள்களால் அழகாகக் குறிப்பிடுகிறார்.

“வண்கண் குடிகாத்தல், கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு.”

என்றும்,

“அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான் எஞ்ஞான்றும்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை”

என்றும் சொல்கிறார்.