பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

உலகைத் திருத்திய

யிருக்க முடியும். எனினும் அவன் மரணப்படுக்கையின் பக்கத்திலே கிடந்தவை இரண்டு அங்கிகள். அதற்காக அவனுடைய மனைவி முணுமுணுத்துக் கொள்ளவில்லை. சீனக் குடியரசின் முதல் தலைவரின் மனைவி என்பதே ஒரு பெருமை தானே. மக்கள், இறந்து விட்டவரின் சொத்துக்கள் எவ்வளவு: அவன் வாழ்ந்த ஆடம்பர வாழ்க்கையின் உச்சநிலை என்னவென்பதையா பார்க்கிறார்கள்? இல்லையே! அவன் வாழ்ந்த ஆடம்பரமான வாழ்க்கையை எண்ணிப் பொறாமைப்படுகிறார்களே தவிர, சிறப்பாக எண்ணுவதில்லை. அவன் எவ்வளவு பணம் சம்பாதித்தானோ அவ்வளவு கெட்டப் பெயருமல்லவா சம்பாதித்தான்!

சீனத்தில் 1866 முதல் 1925 வரை வாழ்ந்து வந்து, பத்து புரட்சிகளிலே தோல்வியுற்று, பதினோராவது புரட்சியில் வெற்றிகண்டு, சீனத்தை மக்களாட்சியின் கீழ் கொண்டுவந்து, இறுதியில் இரண்டு அங்கிகளைத் தன் மனைவிக்கு நினைவுப் பொருளாக வைத்துச் சென்ற சன்யாட்சென்னை நினத்துக் கண்ணீர் விடுகின்ற அளவுக்கு மாடமாளிகை, மணி மண்டபம் வைத்தாண்ட மஞ்சு மன்னனை யார் நினைக்கிறார்கள்? 1860 முதல் 1925வரை வாழ்ந்து, பல புரட்சிகள் நடத்தி, ரஷ்யாவை பொதுவுடமை நாடாக்கிய நிகோலாய் லெனினை நினைக்கின்ற அளவுக்கு-ஆங்காங்கு சிலைகள் எழுப்பிய அளவுக்கு, இரண்டாவது நிக்கோலஸ் என்ற ஜார் மன்னனை யார் நினைக்கிறார்கள்? 1869 முதல் 1948 வரை வாழ்ந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் முதுகெலும்பை முறிந்து, முழு விடுதலை பெற்றுத் தந்த உலக உத்தமர் காந்தியாரை நினைக்கின்ற அளவுக்கு, டாட்டாவையும் பிர்லாவையும் யார் நினைக்கிறார்கள்?

அவரவர்கள் வாழ்ந்த நாட்டின் விடுதலைக்காக அவர்கள் ஏற்றுக்கொண்ட தண்டனைகள், அனுபவித்த சிறைவாசம், பட்டஅடிகள், நாடுகடத்தல் ஆகிய கொடுமைகள் கொஞ்சமா? யாருக்காக? மக்களுக்காக அவர்கள் தங்கள் மக்களைப்பற்றியே நினைக்காமல் நாட்டு மக்களைப்பற்றி நினைத்ததன் விளைவாக ஏற்றுக்கொண்ட தண்டனைகள் இவை. தன் நலத்திற்கு ஒரு