பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மதங்கள்

31

வெளி வேஷம் மனதைத் தூய்மைப்படுத்தாது. மதத்தையும் வளர்க்காது. மனத் தூய்மையுடன் இருந்தால் துறவியும் பாமரனும் ஒன்றுதான். புத்த மதத்திற்கென்று தனி நியம நியதிகள் கிடையாது. புத்த மதத் தத்துவங்கள் எவற்றிலிருந்து தோன்றியவை என்பதை எந்த மனிதனும் ஆராயலாம்.’ புத்தர் மனிதனுக்கு உலக விடுதலையை அளிக்கவில்லை; ஆனால் விடுதலை பெறும் வழியைத்தான் போதித்தார்.

புத்தரின் போதனைகளில் மக்கள் மனம் பறிகொடுத்ததற்கு முக்கிய காரணம், உயர்ந்த மனிதர் சொல்கிறாரே என்பதனால் அல்ல. அவரவர் சிந்தனையில் அலைமோதிய எண்ணங்களின் கேள்விகளுக்கு விடையாக, அவருடைய அறவுரைகள் இருந்ததுதான் காரணம்.

புத்தமதக் கொள்கைகளை ‘பிதாகம்’ என்ற அவர்களது சுவடிகளிலில் காணலாம். இந்தச் சுவடிகள் கிருஸ்து பிறப்பதற்கு 24 ஆண்டுகளுக்கு முன்பு தொகுக்கப்பட்டவை என்று தெரிகிறது. அவற்றில் புத்தரின் சொற்பொழிவுகளே அனேகமாக இருக்கின்றன. கி.மு.80ல் அவை எழுத்துவடிவம் பெற்றன.

பாலி மொழியில் எழுதப்பட்டுள்ள அவருடைய போதனைகளை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். 1. சுல்தா (கதைகள்), 2. வினயம் (கட்டுப்பாடு) 3. ஆதி தர்மம் (நியமம்)

ரைஸ் டேவிட் என்ற ஆராய்ச்சியாளர், “இந்த போதனைகளின் கருத்துக்கள் உலக சிந்தனையாளன் பிளேட்டோவின் உரைகளை நினைவுபடுத்துவதாக உள்ளன” என்கிறார்.

புத்த தத்துவங்களின் வியாக்கியானத்தை முதலில் அளித்தவர் புத்த பிட்சுவாக மாறிய ஒரு பிராமணர். புத்தர் முதன் முதலில் தனது 5 சீடர்களுக்கு உபதேசித்ததை “தர்ம சக்ர பிரவர்த்தனா” என்பார்கள். அதாவது சக்ர நியதி. மனிதனின் செயல்களும் பலன்களும் ஒன்றன் பின் ஒன்றாகச் சுற்றுகின்றன.