பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மதங்கள்

55


(மத்தேயு 27-46) ஒன்பதாம் மணிநேரத்தில் இயேசு, “ஏலீ! ஏலீ!! லாமா சபக்தானி” என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார். அதற்கு, “என் தேவனே! என் தேவனே!! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.

கடவுள் கைகொடுக்கவில்லை என்ற ஏக்கத்துடனேயே இயேசு தன் உயிரை மாய்த்திருக்கிறார் என்பது தெரிகிறது. உலகில் தோன்றிய சிந்தனையாளர்கள், அறிஞர்கள், தத்துவ மேதைகள் எல்லோருக்கும் கிடைக்கிற, மனித சமுதாயம் அளிக்கின்ற பரிசுக்கு இயேசுவின் முடிவும் ஒரு சான்றாக சரித்திரத்தில் நிலைத்துவிட்டது. பழைமையைச் சாடி புதுமையைப் புகுத்த விரும்பும் எவருக்கும் உலகில் எதிர்ப்பு உண்டு என்பதைத்தான் வரலாறு நமக்குக் காட்டுகிறது.

இயேசுவின் மறைவிற்குப் பிறகு அவரது சீடர்கள் அக்கொள்கையை உலகெங்கும் சென்று பரப்பினார்கள். நாளடைவில் அதனுள்ளே பல கருத்து வேறுபாடுகள் தோன்றி கத்தோலிகர்கள் என்றும் பிரொட்டெஸ்டெண்ட் என்றும் பெந்தகோஸ்ட் என்றும் பல பிரிவுகள் ஏற்பட்டன. கான்ஸ்டன்டைன் என்ற ரோம ராஜ்யத்தின் சக்ரவர்த்தி கிருஸ்தவ மதத்தைத் தழுவிய பிறகு பிஷப்புகள் என்ற மதத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ரோம் நாட்டில் அவர்களது ஆட்சி நடைபெறுவதாக உள்ளது. மதத் தலைவர்கள் பிஷப்புகள் என்றும் போப் என்றும் பெயரிடப்படுகிறார்கள். கிருஸ்துவ மதம் ஒரு தனி மதமாகி உலகில் பரவியது என்றாலும் இந்தியத் துணைக் கண்டத்தைப் பொறுத்தவரையில் பாதிரிகள் செய்த மருத்துவ, கல்வித்தொண்டினை நாம் மறக்க இயலாது. ஆங்கிலேயர்களின் ஆட்சி கிருஸ்துவ மதம் இங்கே பரவுவதற்குத் துணை செய்தது என்றாலும், இயேசுவின் பெயரால் தோற்றுவிக்கப் பெற்று, இன்று மக்களுக்குத் தொண்டாற்றி வரும் எண்ணற்ற கல்வி நிலையங்களும் மருத்துவ மனைகளும் நம் மக்களுக்குப் பேருதவியாக விளங்குகின்றன என்பதை நாம் நன்றியுணர்வோடு நோக்குவோமாக.