பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

உலக

யூதர்கள் கருதும் பாவங்கள்

ஆடம்பரம்; எளியோர், விதவை, அனாதைகளை வதைத்தல், மற்றவர் பொருளை நீதியற்ற முறையில் அபகரித்தல், வியாபாரத்தில் மோசடி செய்தல், லாபத்திற்காக பணத்தாசை கொள்ளல், கடன்காரர்களிடம் கொடுமையாக நடந்து கொள்ளுதல், இதுபோன்ற நன்மையல்லாதவை பாவம்.

யூதமதம், உலக வாழ்க்கையிலிருந்து விலகி ஓடி, சாமியாராவதை அனுமதிக்கவில்லை.

வாழ்க்கை என்பது சாபத்தால் வந்த பாவமல்ல. உலகம் வளரவேண்டுமென்ற நல்ல நோக்கத்தில் கடவுள் உலகைப் படைத்தார். தெய்வீக காரியங்களை ஒழுங்காக நடத்துவதற்குத் தனக்குத் துணையாக இருக்கும் வகையில்தான் மனிதர்களுக்கு நல்ல பண்புகளை இறைவன் அருளியிருக்கிறான்.

உபயோகமுள்ள இந்த உடலை வருத்திக்கொள்வதால் மேன்மையில்லை. பொறுமை, அன்பு ஆகியவற்றைப் பழக வேண்டும். தன்னை வென்றவனே-தன் ஆசைகளை அடக்கியவனே வீரன்.

சொர்க்கத்தின் ஆட்சியை உருவாக்கவும், இந்தப் பூவுலகில் தெய்வக் காரியங்களை நிறைவேற்றவும், தெய்வ நியதியை ஒழுங்குப்படுத்தவும் கடவுளின் விருப்பத்தில் தோன்றியது யூத மதம் என்பது அவர்கள் கொள்கை,

தன்னைக் காத்துக்கொள்; தன்னைத் திருத்திக்கொள்; தன்னை முழுமையாக்கிக்கொள்.

யூதர்கள் மறுபிறப்பிலும், தேவதைகளின் பேரிலும் நம்பிக்கை உள்ளவர்கள். ஒவ்வொரு மனிதனின் செய்கைகள் தீர்ப்புநாளில் முடிவெடுக்கப் படுவதாகவும், அதன்பிறகு அவர்கள் நரகத்தின் பாலத்தைக் கடக்க வேண்டுமென்பதும் அவர்கள் கருத்து. ஒரு விதை மரமாகி பல விதைகளைத் தருவது போல மனித உயிரையும் உவமிக்கிறார்கள்.