பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேனா வீரர்கள்

73

அதில் தோல்வி. பிறகு ஒரு வேலைத் தேடிக்கொள்ள ஹாலந்துக்கு அனுப்பி வைத்தார் தந்தை; அங்கேயும் தோல்வி. அந்த வேலையையும் விட்டுவிட்டு ஊர் சுற்றத் தொடங்கினார்.

பதினான்காம் லூயி இறந்து பதினைந்தாம் லூயி பட்டத்திற்கு வந்தநேரம். அவனுக்குத் தக்க வயது வராத காரணத்தால் ஒரு மடையனைக் கார்டியனாக்கி யிருந்தார்கள்; ஊரெல்லாம் சிரித்தது. அவன் அரசனுக்குத் தெரியாமல் லாயத்திலிருந்த குதிரைகளை விற்றுவிட்டான். இதையறிந்த வால்டேர் கிண்டலாக, “அரச சபையிலே அன்றாடம் கூடிக்கலையும் கழுதைகளிலே பாதியை விற்றிருந்தால்கூட எவ்வளவோ கண்ணியமாகவும் மேலாகவும் இருந்திருக்கும்” என்று சொன்னான். இதை கேட்ட கார்டியன் வால்டேரை பாஸ்டிலி சிறையிலடைத்து விட்டான்.

தான் சிரிப்பதும் பிறரை சிரிக்க வைப்பதும்தான் பொழுது போக்கு. “உலகத்தில் மனிதர்கள் சிரிக்கத் தெரியாமலும், சிரிக்க வைக்கத் தெரியாமலும் இருந்தால் பலபேர் தூக்குப் போட்டுக்கொண்டு மாண்டு போவார்கள்” என்கிறான் வால்டேர் ஓரிடத்தில்.

எந்த மன்னனுடைய கார்டியனால் பாஸ்டிலி சிறையில் அடைக்கப்பட்டானோ அவனாலேயே, அவனுடைய மனமாற்றத்தாலோ அல்லது வால்டேருடைய நண்பர்களின் வற்புறுத்தலாலோ, சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டான் வால்டேர். அதுமட்டுமல்ல அதே கார்டியனிடமிருந்து தேவையான பணமும் மற்ற உதவிகளும் கிடைத்தன.

சிறையைவிட்டு வெளிவந்தவுடன் ஒரு துன்ப இயல் (Tregedy) நாடகத்தையும் ஒடிப்பி (oedipe) என்ற மற்றாெரு நாடகத்தையும் எழுதி அரங்கேற்றினார். அந்த நாடகத்தை அரங்கேற்றியதுதான் தாமதம், நாடெல்லாம் இதே பேச்சு. ‘இவன் ஒரு உதவாக்கரை’ என்று எந்த தந்தை இவரை ஏசினாரோ, அவரே அந்த நாடகத்தைப் பார்த்துவிட்டு அதில் வந்த உரையாடல்களை இரவெல்லாம் பிதற்றிக்கொண்டிருந்தாராம்.

பூ. 102 உ.-5