பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

புரட்சி செய்த

சீமான், அடியாட்களை விட்டு அவரை நையப் புடைத்தாளும், ஆனால் அப்போதும் அந்தச் சீமான், “எங்கு வேண்டுமானாலும் அடியுங்கள். தலையில் மாத்திரம் அடிக்காதீர்கள். ஏனென்றால் அந்தத் தலையிலிருந்து இன்னும் எவ்வளவோ வரவேண்டியிருக்கிறது” என்று சொன்னராம். என்ன கருணை பாருங்கள்!

பிரஞ்சு எல்லையைவிட்டு வெளியேறி, ஆங்கில நாட்டிற்குச் சென்று, அங்கு பல பெரியார்களை Lord Bolingbroke என்பவர் மூலம் சந்தித்து அந் நாட்டுச் சிறப்பையும், எந்த எதிர்மறையான கொள்கைகளையும் கண்டிக்காமல் அவற்றிலுள்ள சாதக பாதகங்களை அலசி ஆராயும் பெருந்தன்மை பெற்றிருந்த ஒரு நாகரிகமான நாட்டையடைந்துவிட்டோம் என்ற பெருமிதத்தோடு ஆங்கிலத்தையும் கற்றுக்கொண்டார். Comedy of manners என்ற சமூக கேளிக்கை நாடகத்தை எழுதிய காங்க்ரீவ் என்பவரையும் சந்தித்தார். அப்போது பிரெஞ்சுப் பொருளாதாரம் சீர்கெட்டிருந்ததால் லாட்டரிசீட்டு வெளியிட்டார்கள். அவை அவ்வளவையும் வால்டேர் வாங்கி பெரும் பணக்காரராய்விட்டார்.

ஆர்டெமைர் (Artemire) என்ற அவரது அடுத்த நாடகம் தோல்வியுற்றது. தான் முன்பு பாஸ்டிலி சிறையிலிருந்தபோது எழுதிய ஹின்றியேட் (Henriade) என்ற நாடகம் ஐரோப்பா முழுவதும் ஒரு உலுக்கு உலுக்கிவிட்டிருந்ததோடு, இவரைப் பற்றி ‘ஐரோப்பியப் பண்பின் சொரூபம்’ Embodiment of European culture என்று அழைக்கும் அளவிற்குப் புகழை ஈட்டித் தந்தது. அப்போதுதான், டிடிராட் (Diderot) என்பவர் குருடர்கள் எழுத்துக்களைத் தொட்டுப் படிப்பதற்கான ஒரு முறையைக் கண்டுபிடித்துக் கொடுத்தார். பவ்வன் (Buffon) என்பவர், பூமியினுடைய ஆயுளையும் தொன்மையையும் கணக்கிட முயன்று சில கருத்துக்களை வெளியிட்டார் என்பதற்காக, அவற்றை அவர் பகிரங்கமாக வாபஸ் வாங்கவேண்டு மென்றும், மன்னிப்புக் கேட்க வேண்டுமென்றும் 1751ல் அரசாங்கம் கடுமையான உத்தரவொன்றை வெளியிட்டது.