பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


பாட்டிற்குள் பள்ளிகள் வந்ததும், அவர்கள் கொள்கைகளுக்கேற்ப, பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டன.

உடற்கல்வி-பாடத்திட்டங்களில் ஒன்றாக வராதவாறு அந்த மதத் தீவிரவாதிகள் கவனமாகப் பார்த்துக் கொண்டார்கள். அவர்களைச் சார்ந்த பல்கலைக் கழகங்களும், மாணவ வாழ்க்கைக்கு உடற் கல்வி முக்கியமான ஒன்றல்ல, தேவையற்றது, என்று கூறி உடற் கல்வியை ஒதுக்கித் தள்ளினர்.

மதமானது இப்படி உடற்கல்வியை ஒதுக்கியபோது, அருமையான அறிவு கூட, குழப்பங்களையும் குதர்க்கங் களையும் உண்டு பண்ணி, இப்படி அழித்தது.

கல்வியில் உண்மைகள் தாம் முக்கியமானவை, மக்கள் வெற்றிகரமாக வாழ்க்கையை நடத்திட மூளை வளமும், அறிவு வளமும் அடைந்தால் போதும். உடலை வளர்க்கும் உடற் கல்வி தேவையற்றது. தீமை பயப்பது என்ற கொள்கையை அறிவுடைய மக்கள் அரங்கேற்றம் செய்தனர். ஆரவாரத்துடன் பரப்பினர்.

மத்திய காலத்தில், அறிவாளிகளும், பல்கலைக் கழகங்களும் இதே பணியை மேற்கொண்டு, உடற்கல்வியை வளரவிடாது தடுத்தனர். பரம்பரை பரம்பரையாக இதே கருத்துக்கள் தாம் கல்வி முறையுடன் கலந்து வந்தன. (இந்தியாவின் இன்றைய நிலையை ஒத்து பார்த்துக் கொள்ளுங்கள்.)

அன்றைய அறிவில் ஒன்றிப் போன விஷம் தான் இன்றும் உடற்கல்வியை சாடிக் கொண்டிருக்கிறது. இன்று கூட அறிவாளிகள் என்ன சொல்கிறார்கள்! மனதுக்கும் உடலுக்கும் சம்பந்தம் இல்லை என்று தானே கூறுகிறார்கள்!